இமானுக்கு சரக்கடிக்க கற்றுத்தரப்போகிறாரா சந்தானம்..?

இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே உடனே சந்தானம் ஞாபகத்துக்கு வருவதுபோல சரக்கும் ஞாபகத்துக்கு வந்துவிடும்.. காரணம் அந்த அளவுக்கு அவரது படங்களில் சரக்கு பிரதான கதாபாத்திரமாகவே இடம்பெறும். பல காட்சிகள் பாரில் தான் நடக்கும். ஆல் இன் ஆல் அழ்குராஜாவில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசித்து இருந்தார் ராஜேஷ்.

இப்போது மீண்டும் ஆர்யா, சந்தானம் கூட்டணியில் அதே ‘சரக்கு’டன் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.. படத்தின் டைட்டிலையும் சுருக்கி VSOP என வைத்துவிட்டார் ராஜேஷ். இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதன்முறையாக இவர்களது கூட்டணியில் சேர்ந்துள்ளார் டி.இமான்.

இந்த படத்திற்கு இசையமைப்பது சம்பந்தமாக பேச சென்றபோது படத்தின் டைட்டீலை VSOP என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் ராஜேஷ். ஆனால் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறதென்று குழம்பிய இமான், அப்போதைக்கு தனக்கும் தெரிந்ததுபோல சிரித்து வைத்தாராம்.

ஆனாலும் வீட்டிற்கு சென்றதும் தனது தந்தையிடம் VSOP பற்றி கேட்டபோது, அவரும் தெரியலேயேப்பா என்று சாதாரணமாக சொல்லி விட்டுவிட்டாராம். ஆனால், பின்னர் அதை தனது மனைவியிடம் இமான் சொன்னபோது, என்னது VSOP-யா என்று ஷாக்கானாரம்.. அதன்பிறகு அவரது மனைவி விளக்கியபின் தான் அது டாஸ்மாக் அயிட்டத்தின் பெயர் என்று இமானுக்கு புரிந்ததாம்..

இந்த விஷயத்தை ‘VSOP’ இசைவெளியீட்டு விழாவில் பகிர்ந்துகொண்ட இமான், “அதற்காக என் மனைவிக்கு குடிக்கிற பழக்கம் இருக்குமோ என்று சந்தேகமாக நினைக்க வேண்டாம். என் மாமனார் அப்பப்ப சரக்கு யூஸ் பண்றவர். அதனால் என் மனைவிக்கு அதுபற்றி தெரிந்திருக்கிறது அவ்வளவுதான். என் வீட்டில் நாங்கள் யாருமே குடிக்காததால் அது ஒரு சரக்கின் பெயர் என்பதே எங்களுக்கு தெரியவில்லை” என்கிற விளக்கத்தையும் அளித்துவிட்டார்.

இது இமானின் குடிக்காத நல்ல எண்ணத்தையும் வெளிப்படையான பேச்சையும் காட்டியது. ஆனால் அடுத்து பேச வந்த சந்தானம் “ நம்ம டீமுல இருந்துகிட்டு இப்படி சொல்றதே பெரிய அவமானமா இருக்கு. அதனால் இன்றைக்கு பார்ட்டியில நீங்க கலந்துக்கிடுறீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, கலரைப் பார்த்தே என்ன சரக்குன்னு உங்களை சொல்ல வைக்கிறேன் என்று இமானைப்பார்த்து கலாய்த்து விட்டு பேச ஆரம்பித்தார்.

என்னதான் வெளிப்படையாக பேசுகிறேன் என நகைச்சுவையாக பேசினாலும் சரக்கு அடிக்காதவரையும் சரக்கு அடிக்க சந்தானம் வற்புறுத்துகிறாரோ என்கிற எண்ணமும் ஏற்படாமல் இல்லை.. அடுத்தவரை கலாய்த்தே பழக்கப்பட்ட சந்தனத்துக்கு, நகைச்சுவை என்றாலும் அதில் நாசூக்கு வேண்டும் என்பது புரிந்தால் சரி..