விழாவில் கலந்துகொள்ளாததற்கு அஜித் சொல்லும் வியாக்கியானம் சரிதானா..?


கடந்த சில தினங்களுக்கு முன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் 2 நாட்கள் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடந்தது. இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். ஆனாலும் அஜித், விஜய் உள்ளிட்ட வேறு சில முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இன்னும் சிலரை அழைக்கவில்லை அதனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் அஜித் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்தான் வழக்கமாக எந்த விழாவிலும் கலந்துகொள்ள மாட்டாரே என ஒரே பதில் தான் வெளிவரும். ஆனாலும் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் சங்க நிர்வாகிகள் அஜித்தை அழைத்தனராம்.

ஆனால் விழாவிற்கு வர தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த அஜித், “ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். அதைத் தவிர இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக?, நாம் நன்றாக சம்பாதிக்கிறோம். நாம் 10 பேர் பணம் போட்டு கட்டடத்தை கட்டுவோம்” என்று வந்தவர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி நடிகர் சங்கம் தரப்பில் சிலர் கூறியதாவது, “அஜித் எண்ணம் நல்ல எண்ணம் தான். ஆனால் அந்த கட்டடம் கட்டுவதில் அனைவரின் உழைப்பும் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையும். பிற்காலத்தில் இந்த கட்டடம் கட்ட இன்னார் இவ்வளவு தொகை கொடுத்தார் என சொல்வது பந்தாவில் தான் சேருமே தவிர அது ஒரு கூட்டு முயற்சியின் அடையாளமாக இருக்காது.

தவிர அஜித் சொல்வது போல ஏற்கெனவே நம் படங்களுக்கு மக்களிடம் பணம் வாங்குகிறோம். அதனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கும் கட்டணம் பெறுவது எதற்காக என்கிற கேள்வியும் இங்கே தேவையில்லாத ஒன்று.

காரணம் மலேசியா, சிங்கப்பூரில் இருக்கும் வசதி படைத்த தமிழர்களும், மற்ற மக்களும் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்குகின்றனர். அதனால் அவர்களுக்கும் அது பெரிய நஷ்டம் இல்லை. நாமும் அவர்களை சுரண்டவில்லை என்பதே உண்மை..

மேலும் அங்கிருக்கும் ரசிகர்களுக்கு நம் நட்சத்திரங்கள் அனைவரையும் நேரில் பார்க்க கிடைத்த ஒரு வாய்ப்பாகத்தான் அதை பார்க்கவேண்டும். அதைவிடுத்து அஜித் இவ்வாறு சாக்குபோக்கு சொல்லி விழாக்களில் பங்கேற்காமல் இருப்பதை தவிர்க்கவேண்டும்” என சொல்கிறார்கள்..