இசை எங்கிருந்து வருது..? கீபோர்டை தடவும் சகலகலா வாரிசு..!

தந்தை ஒரு வியாபாரம் பார்த்தால், அதில் மகனையும் இழுத்து விடத்தான் முயற்சி செய்வார்கள்.. கூட்டல் கழித்தல் கணக்கு தானே.. கொஞ்ச நாள் கல்லாவில் உட்கார்ந்ததும் அந்த சூட்சுமம் மகனுக்கும் பிடிபட்டுவிடும்.. கணக்குக்கு இது சரிவரும்.. கற்பனைக்கு ஒத்துவருமா..? அது அவரவர்க்கு மூளையில் உதிக்கும் சமாச்சாரம் அல்லவா..?

பத்து வருடத்துக்கு முன் டைரக்சனில் சகலகலா வல்லவராக அப்பா இருந்ததால், மூத்த மகன் தானும் படம் இயக்குகிறேன் என கோதாவில் குதித்தார். ‘அந்தப்படத்தை இன்னொருவர் பெயரை போட்டு தானே இயக்கினார். படம் ஹிட்டு என்றதும் நான்தான் இயக்கினேன் என ஒரிஜினல் இயக்குனரின் பெயரை இருட்டடிப்பு செய்தார்.. பிளாப் என்றால் பழியை அவர் மீது போட்டுவிடலாம் அல்லவா..? எப்படி இருந்தாலும் பெயர் போட்டது போட்டதுதானே..?

அதனால் சூட்டோடு சூடாக ‘சக்தி வாய்ந்தவன்’ படத்தை தானே இயக்கி ஓரளவு தம் கட்டி ஓட்டி, எனக்கும் படம் இயக்க தெரியும் பாத்தியா என அப்படி இப்படி ஷோ காட்டிவிட்டு ஒதுங்கினார். சரி அவராவது பரவாயில்லை.. அவருடைய அப்பாவின் டைரக்சனில் சின்ன வயதில் இருந்து பல படங்கள் நடித்ததால் ஓரளவு கற்றுக்கொண்டார் என நம்பலாம்.

ஆனால் அவரது தம்பியோ இசையமைப்பாளராக ரூட்டை மாற்றினார். ஆஹா ஒரு புது இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப்போகிறோம்.. பாட்டு ஹிட்டானால் ‘இவரு நம்ம ஆளு’, நான்தான் இவரை அறிமுகப்படுத்தினேன் என புகழில் ராயல்டி கேட்கலாம் என ‘நம்பி’ தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார் கடற்கரை இயக்குனர்..

ஆனால் தம்பியோ ‘இசை எங்கிருந்து வருது தெரியுமா.?’ என்கிற ரேஞ்சில் கீ போர்டை தடவுகிறார்.. தடவுகிறார்.. தடவிக்கொண்டே இருக்கிறாராம். ஆனால் இசை தான் வருவேனா என்கிறதாம். பொறுத்து பார்த்து, வெறுத்துப்போன பாண்டிராஜ் முகம் சிறுத்துப்போய் ‘அட போங்கப்பா.. இது நம்ம ஆளே இல்ல.. வேற ஆளு’ என இன்னொரு படத்தை டைரக்ட் பண்ண போய்விட்டாராம்.

சரி மகன்களின் நிலைதான் இப்படி அந்தரத்தில் நிற்கிறதே, தந்தையாவது ஏதாவது சொல்லி சரி பண்ணுவார் என பார்த்தால், அவரோ ‘டண்டணக்கா’ வார்த்தைக்கு கோடி ரூபாய் ராயல்டி கேட்டு மல்லுக்கு நிற்கிறார்.. இதையெல்லாம் சரி பண்ணி.. படம் எப்போ வந்து.. ஆவ்வ்வ்வ்….!