“ஷவர் மாதிரி அல்ல.. தீயணைக்கும் ஜெட்டா மாறணும்” ; உசுப்பேற்றிய கமல்..!


ட்விட்டர் மூலமாக நேரடியாகவும், அவ்வப்போது பொதுமேடைகளில் மறைமுகவும் இந்த ஆளும் அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கமல். இதோடு நிறுத்திக்கொள்ளாமல் வாராவாரம் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பல அதிரடி கருத்துக்களை கூறி அரசை விமர்சித்து வருகிறார்.

அதுவும் அங்குள்ள போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அறிவுரை கூறும் விதமாக சாதுர்யமாக அவர் அரசியல் பேசுவதே கைதட்டலை அள்ளுகிறது. அந்தவகையில் இந்த வாரம் சனிக்கிழமை, போட்டியாளர்களில் இருவர் கைகோர்த்துக்கொள்வது நல்ல விஷயம் தான் என்றாலும் மற்றவர்களுக்கு அதனால் நன்மை ஒன்றும் இலையே என ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் அணிகள் இணைப்பு பற்றி கிண்டலடித்தார்.

அதேபோல இன்று (ஞாயிறு) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ஜூலி.. அவர் மீது பார்வையாளர்கள், பொது ரசிகர்கள் காட்டிய கோபம் பற்றி சுட்டிக்காட்டிய கமல், ஜூலி மீது காட்டிய இவ்வளவு கோபத்தில் ஒரு சிறு அளவைக்கூட, நீங்கள் ஓட்டுப்போட்டு ஆட்சிக்கு அனுப்பியவர்களிடம் காட்டவிலையே.. குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே இருக்க வேண்டியவர்கள் எல்லாம் நம்மை குண்டர்கள் போல தாக்கும் அளவுக்கு வந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயாம என கோபத்துடன் கேட்டார்.

மேலும் “இந்த கோபத்தை அப்படியே தேக்கி வையுங்கள்.. அதற்கான நேரம் வரும்போது வெளிப்படுத்துங்கள்.. ஆனால் ஷவரில் இருந்து விழும் தண்ணீர் போல பிரிந்துபோகாமல், தீயணைக்கும் இஞ்சின் குழாயில் இருந்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரின் வேகத்தோடு வெளிப்படுத்துங்கள்” என கூறியுள்ளார் கமல்.