காஞ்சனா-2 – விமர்சனம்

சூப்பர்ஹிட் படமான காஞ்சனாவில் இருந்து காஞ்சனா-2வை எந்த விதத்தில் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் லாரன்ஸ்..? பார்க்கலாம்..

பேய் என்றாலே பயந்து நடுங்கும் அதே ராகவா லாரன்ஸ் தான் இதிலும்.. சுகாசினி நடத்தும் சேனலில் கேமராமேனாக வேலைபார்க்கும் அவருக்கு, உடன் வேலைபார்க்கும் நிகழ்ச்சி இயக்குனரான தாப்ஸி மீது காதல். சேனலின் டி.ஆர்.பியை கூட்டுவதற்காக பேய் பற்றிய நிகழ்ச்சி ஒன்றை படமாக்க இவர்கள் இருவருடன் மாமல்லபுரம் கடற்கரை பங்களாவுக்கு கிளம்புகிறது ஒரு டீம்.

போன இடத்தில் ஷூட்டிங் நடத்துகிறோம் என கடற்கரை மணலில் புதையுண்டு கிடந்த பேயை தெரியாமல் உசுப்பி விடுகிறார்கள்.. ஒன்றுக்கு இரண்டாக கிளம்பி வரும் பேய்(கள்) லாரன்ஸையும், தாப்ஸியையும் பிடித்துகொள்கின்றன. லாரன்ஸின் அம்மா கோவை சரளா கிறிஸ்துவ பாதிரியாரிடம் தனது மகனை காப்பாற்றும்படி முறையிட, அப்போதுதான் பேய்களின் சரித்திரம் தெரிய வருகிறது.

வில்லன் ஜெயப்பிரகாஷால், சிவா (அதுவும் லாரன்ஸ் தான்), கங்கா (நித்யா மேனன்) உட்பட அவரது நண்பர்களும் கொல்லப்படுகிறார்கள். இப்போது கட்டவிழ்ந்த பேய்களான சிவாவும் கங்காவும் அவரை கொல்ல துடிக்கின்றன. பேய்களை அழிக்க மந்திரவாதி ஒருவனை ஏவி விடுகிறார் ஜெயபிரகாஷ். இறுதி யுத்தத்தில் வில்லன் வதம் செய்யப்பட, முடிவு சுபம்.. முனி-4ஆம் பாகமும் இருக்கு என என்ட் கார்டு போட்டு மிரட்டி அனுப்புகிறார் லாரன்ஸ்.

சரி.. குழந்தைகளையும் பெண்களையும் கவர் பண்ணவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடி இருக்கிறார் லாரன்ஸ். அதிலும் பயந்தாங்கொள்ளி என்பதற்காக பாத்ரூமுக்கு வாட்ச்மேன் வைப்பது உச்சபட்ச காமெடி. மற்றபடி அவர் பயந்து நடுங்குவதும், பேயாக மாறி உறுமுவதும் னாம் ஏற்கனவே பார்த்தது தானே.. அதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாததால், இரண்டு வேடங்ககுள்.. கிழவி, திருநங்கை என நான்கு எக்ஸ்ட்ரா கெட்டப்புகளிலும் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

காலை விந்தி விந்தி நடக்கும் நித்யா மேனன் அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். பேய் பிடித்தால் யார் பொருத்தமாக ரியாக்ட் பண்ணுவார்கள் என போட்டி வைத்தால் அதிலும் நித்யா மேனன் முந்துகிறார். தாப்ஸி வெறும் கவர்ச்சிக்குத்தான்.. மற்றபடி அவர் பேய்முகம் காட்டும்போது சிப்பு வருது சிப்பு.

கோவை சரளாவின் பங்கு இதிலும் குறைவில்லாமல் தொடர்கிறது. இந்தமுறை காமெடிக்கு ரேணுகாவை கூட்டு சேர்த்திருக்கிறார்கள். சரளாவுக்கு வரும் சரளமான நகைச்சுவை, ரேணுகாவிடம் வருவேனா என முரண்டு பிடிக்கிறது.

பாத்ரூம் வாட்ச்மேனாக மயில்சாமி கலக்கல். குறிப்பாக லாரன்ஸுக்கு துணையாக மயில்சாமி பாத்ரூமுக்கு செல்லும் காட்சியும் அதற்கு மனோபாலாவும், சாம்ஸும் பண்ணும் கற்பனையும் நான்ஸ்டாப் காமெடி.. ஸ்ரீமனும் தன் பங்கிற்கு அசத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் வில்லன் என்றாலும் கிடைத்த கேப்பில் காமெடி பண்ணவும் தவறவில்லை. சுகாசினி, ஜெயபிரகாஷ் வந்து போகிறார்கள்.. அவ்வளவுதான்.

பொதுவாக பேய்படம் என்றால் முதல் பாதியில் அசால்ட்டாகவும், இடைவேளைக்குப்பின் அலர்ட்டாகவும் இருப்பார்கள். இதில் இடைவேளைக்கு முன்பு கனகச்சிதமாக கையாளப்படும் திகில், த்ரில் இரண்டுமே இரண்டாம் பாதியில் கொஞ்சம் சுதி இறங்கி விடுகின்றன.

பேய்கள் கொல்ல வந்தது தங்களை அழித்த வில்லனை.. ஆனால் தாப்ஸியை காப்பாற்ற வரும் நல்ல மந்திரவாதியை கொல்வதிலும், கோவை சரளாவையும், ரேணுகாவையும் விரட்டி விரட்டி அடிப்பதிலும், பேய்ப்படம் தான் என்றாலும் ஒரு லாஜிக் இருக்கவேண்டாமா..?

நித்யா மேனனை அவ்வளவு நாளாக லவ் பண்ணும் லாரன்ஸ் அதை அவரது திருமணத்திற்கு முதல்நாளே சொல்லியிருந்தால் அவரது அப்பா இறந்திருக்க மாட்டாரே.. இதில் அபத்தம் என்னவென்றால், தனது அப்பா இறந்த தினத்தன்று இரவே தனது காதலை சொல்லும் லாரன்ஸிடம் நித்யா மேனன் ரொமான்ஸ் பண்ணுவது..

அதைவிட இன்னொரு அபத்தம் அதே இரவில் நித்யா மேனனை தனது பைத்தியம் பிடித்த மகனுக்கு கட்டிவைப்பதற்காக, அவருடன் இருப்பவர்களை எல்லாம் ஆள் வைத்து தூக்கி வருவதும், குழந்தை முதல் கிழவி வரை அனைவரையும் கொல்வதும்.. பேய்களுக்குத்தான் லாஜிக் தேவையில்லை.. மனிதர்களுக்காவது வைக்கணும் தானே பாஸ்..

டைரக்சன் ஏரியாவில் இடைவேளை வரை வீராப்பு நடைபோடும் லாரன்ஸ், இடைவேளைக்குப்பின் நடிகருக்குள் புகுந்து காணாமல் போய்விடுகிறார்.. பயப்படுவதற்கு பத்துக்கு மேற்பட்ட காட்சிகள் இருந்தாலும் காஞ்சனா பேயிடம் காணப்பட்ட உக்கிரம், கங்கா பேயிடம் சற்று குறைவாகவே இருக்கிறது.