சரத்குமாரை டென்ஷனாக்கியதா கருணாஸின் பேச்சு..!

கொம்பன் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் மாலை அந்தப்படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து பேசுவதற்காக.. இல்லையில்லை, ஒட்டுமொத்த திரைரயுலகமும் இந்தப்பிரச்சனைக்கு எதிராக ஒன்று கூடியுள்ளோம் என அறிவிப்பதற்காக பிலிம் சேம்பர் கட்டடத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் உட்பட சில முக்கிய நபர்கள் கொம்பனுக்கு எதிரான கிருஷ்ணசாமியின் செயலுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் ஞானவேல்ராஜாவும் பேசினார். படத்தின் இயக்குனர் முத்தையாவை பேச சொன்னபோது அவருக்கு பதட்டத்தில் பேச வரவில்லை.. கார்த்தியும் தான் பேசுவதற்கு எதுவுமில்லை என கூறிவிட்டார்.

இந்த நிலையில் கார்த்தி பக்கத்திலேயே நின்றிருந்த கருணாஸ், டக்கென முந்திக்கொண்டு, “கிருஷ்ணசாமி வேண்டுமென்றே இப்படி பிரச்சனையை கிளப்புகிறார். கமல் நடித்த படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைத்ததை எதிர்த்தவர் கொஞ்ச நாளைக்கு முன்பு சண்டியர் என்கிற பெயரில் படம் வந்ததை ஏன் எதிர்க்கவில்லை.. பிரபலங்களை எதிர்த்தால் தான் தனக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதால் இப்போது கார்த்தியின் படத்தையும் எதிர்த்து தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்” என படபடவென பொரிந்தார்..

இதைக்கேட்டு சரத்குமாரின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி தோன்றி மறைந்தது.. அதற்கு காரணம், தலை இருக்க தேவையில்லாமல் வால் ஆடுகிறதே என்கிற கோபத்தினாலா அல்லது, கருணாசும் கிருஷ்ணசாமியும் எதிர் எதிர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கருணாஸின் பேச்சு வேறுவிதமாக பிரச்சனையை கிளப்பிவிடும் என்ற பயத்தினாலா தெரியவில்லை. உடனே இத்துடன் கூட்டத்தை முடித்துக்கொள்கிறோம் என்று கூறி படக்கென எழுந்துவிட்டார்..