“என் படத்தின் கதையை குஷ்புவுக்கு ஏன் சொல்லவேண்டும்..?” – வனயுத்தம் இயக்குனர் காட்டம்..!

‘ஜெய்ஹிந்த்-2’ படத்தை தொடர்ந்து அர்ஜுன் நடித்து வரும் படம் ஒரு ‘ஒரு மெல்லிய கோடு’. ‘குப்பி’, ‘வனயுத்தம்’ போன்ற வித்யாசமான படங்களை இயக்கிய ரமேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார்.

சில தினங்களாக இந்தப்படத்தில் குஷ்புவும் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை குஷ்பு மறுத்துள்ளார்.. ஆனால் இந்தப்படத்தின் கதையை குஷ்பு தம்மிடம் சொல்லச்சொன்னதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அது கூட படத்தின் இயக்குனர் ரமேஷை அழைத்து கதை கேட்காமல், அவரது டீமில் இருந்த ஒரு நபரை அழைத்து படத்தின் கதை என்னவென்று சொல்லும்படி வற்புறுத்தினாராம் குஷ்பு.

அவர்தான் படத்தில் நடிக்கவில்லையே.. பிறகு எதற்கு கதை கேட்டார் என்கிற கேள்வியும் எழுந்தது. ரமேஷின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் என்றும், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பிரமுகரின் மரணம் குறித்த திரைப்படம் என்றும் கூறப்படுகின்றது.

அந்தப்பிரமுகர் காங்கிரசை சேர்ந்த சசி தரூரின் மறைந்த மனைவி சுனந்தா புஷ்கர் தான் என்பது குஷ்புவுக்கு தெரிய வந்ததாம்.. சுனந்தாவின் மர்மமான மரணத்தை குறித்து படம் எடுக்கிறேன் என, தங்களது கட்சி சார்ந்தவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் இழிவுபடுத்தி விடுவார்களோ என்பதற்காகத்தான் முன்னெச்சரிக்கையாக கதை என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினாராம் குஷ்பு.

ஆனால் இப்படி தனது டீமில் இருந்த ஒருவரை அழைத்து குஷ்பு கதை கேட்டதை அறிந்த இயக்குனர் ரமேஷ், என் படத்தின் கதையை குஷ்புவுக்கு ஏன் நான் சொல்லவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளதோடு, படத்தின் கதைப்படி மனிஷா கொய்ராலா இறந்துவிடுவார். அதற்கு பிறகு நடக்கும் விசாரணையை மையப்படுத்தி கதை நகரும். படம் வெளியாகும் போது மக்கள் எதைப்பற்றிய படம் என்று தெரிந்து கொள்வார்கள் என்று பதிலடி விளக்கமும் தந்துள்ளார்.

ஆனால் குஷ்புவோ பிளேட்டை அப்படியே திருப்பி போட்டுள்ளார்.. அதாவது அர்ஜூனின் மனைவியாக ஒரு படத்தில் நடிக்க என்னை சிலர் அணுகினர். நான் கதை கேட்காமல் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பதால் கதையைக் கேட்டேன். தனிப்பட்ட முறையில் நடிகர் அர்ஜுனை அழைத்துப் பேசினேன். படத்தில் நடிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டதுதுடன், கவுரவ வேடங்களில் தோன்றுவதிலும் எனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினேன். இதில் புதிதாக இந்த சுனந்தா புஷ்கர் விஷயம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை என ட்விட்டர் மூலமாக பதில் அளித்துள்ளாராம்.

ஒரு மெல்லிய கோடு இப்போதே அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது போல..!