“பனை மரத்தின் கீழ் நின்று பால் தான் குடித்தேன்” ; லாரன்ஸ் பல்டி…!


தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத நபரை சந்தித்து விட்டு ‘நான் போனது சும்மா தான் என ஒப்புக்கு சப்பாணி காரணம் சொல்லி மாட்டிக்கொண்டுள்ளார் லாரன்ஸ்.. விஷயம் இதுதான்.. தமிழக அரசியல் களம் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாகவே சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சியான அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஓபிஎஸ்., ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சினிமா கலைஞர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு அவருக்கு ஆதரவான சந்திப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆனால் லாரன்ஸோ முதல்வர் பன்னீர் செல்வத்தை நான் பார்த்தது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி சொல்லவே அவரை சந்தித்தேன். எனக்கு அரசியல் தெரியாது. அந்தளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று கூறியுள்ளார்..

பனைமரத்தின் கீழே நின்று பாலை குடித்தாலும் கூட கள் குடித்ததாக தான் இந்த உலகம் நினைக்கும் என்பது லாரன்ஸுக்கு தெரியாதா..? ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி சொல்வதற்கு அவருக்கு இதற்கு முன்பு நாளே கிடைக்கவில்லையா என்கிறார்கள் எதிரணி ஆட்கள்.