ரஜினியின் வெற்றிடத்தை நிரப்பும் எம்.ஜி.ஆர்..!


இது என்னடா எம்.ஜி.ஆர் இடத்தை நான் நிரப்புவேன் என ரஜினிதான் கூறியுள்ளாரே தவிர, இது என்ன ரஜினியின் வெற்றிடத்தை எம்.ஜி.ஆர் நிரப்புவார் என்றால் அது எப்படி என குழப்பம் வருகிறதா..? சிம்பிள் லாஜிக்.. கடந்த 1ந் தேதி முதல் சினிமா ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை.

சென்னை தவிர்த்த மற்ற ஊர்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. சென்னை தியேட்டர்களில் தற்போது கடைசியாக வெளிவந்த நாச்சியார், கலகலப்பு இரண்டாம் பாகம் படங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான பிளாக் பேந்தர் சில தியேட்டர்களில் ஓடுகிறது.

நாளை முதல் பசிபிக் ரிம் என்கிற ஹாலிவுட் படம் வெளிவருகிறது. தியேட்டர்கள் தாராளமாக கிடைப்பதால் வழக்கத்துக்கு அதிமான தியேட்டர்களில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. கத்துக்குட்டி என்ற படமும் நாளை மீண்டும் வெளிவருகிறது.

இதுதவிர மற்ற தியேட்டர்களுக்கு கை கொடுப்பது எம்.ஜி.ஆர் படங்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நடோடி மன்னன் படம் நாளை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது. அதேபோல உலகம் சுற்றும் வாலிபன், சிரித்து வாழ வேண்டும், ஒளிவிளக்கு, உரிமைக்குரல், அடிமைப்பெண் போன்ற படங்களும் திரையிடப்படுகிறது.

ஆக, ரஜினி படங்களை வாங்கி வெளியிட ஆர்வம் காட்டுவது போல, தற்போது எம்.ஜி.ஆர் படங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.. அந்தவகையில் ரஜினியின் வெற்றிடத்தை எம்.ஜி.ஆர் நிரப்புகிறார் என்பது உண்மைதானே..?