இசையமைப்பாளரின் எதிர்காலத்துக்கே வேட்டுவைத்த இரிடியம் பிசினெஸ்.. அழுது புலம்பும் அம்மா நடிகை


போதுமென்ற மனம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் என்னென்ன அவமானங்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு லேட்டஸ்ட் உதராணம் தான் நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரேஷ் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு.. இவர் பிரபல சீனியர் நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. விஷயம் இதுதான்..

ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயசித்ரா 60. நடிகையான இவர், குறத்தி மகன், அரங்கேற்றம் உட்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவரது கணவர் கணேஷ், 62. தொழில் அதிபரான இவர், 2020, டிச., 4ல் இறந்தார்.

இவர்களது ஒரே மகன் அம்ரீஷ், 33; இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன் தாய் இயக்கிய, நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அம்ரீஷ்க்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, நெடுமாறன், 68 என்பவருக்கும், 2013ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகள், தங்களிடம் அரியவகை இரிடியம் உள்ளது. இதை மலேஷியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளது. எங்களுக்கு, 26.20 கோடி ரூபாய் கொடுத்தால் போதும். மீதி தொகை முழுதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என, நம்ப வைத்துள்ளனர். மேலும், தங்களிடம் இருப்பது அரியவகை இரிடியம் தான் என்பதை, கனடா ஆய்வகம் உறுதி செய்து சான்று அளித்து இருப்பதாக, ஆவணத்தை காட்டியுள்ளனர்.

இவரை மலேஷியாவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கூட்டாளிகள் வாயிலாக, நட்சத்திர ஓட்டலில் அந்நாட்டு நிறுவன பிரதிநிதிகள், அரியவகை இரிடியத்தை, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகளிடம், 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மலேஷிய நிறுவனத்திடம் இருந்து பணம் வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுமாறன், நடிகையின் மகனை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது பற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை பிடித்து, விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்தனர்; கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இருக்கும் பணத்தை ஒழுங்காக அனுபவிக்காமல், இப்படி அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்கானே என மகனை நினைத்து அழுது புலம்புகிறார் அம்மாவான நடிகை ஜெயசித்ரா.