“என் மகன் இந்தியன்” ; 35 வருடத்திற்கு முன்பே மரபை உடைத்த விஜய்யின் அப்பா


இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடப்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சிகள் ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. மேலும் விஜய்யின் மதத்தை குறிப்பிடும் வண்ணம் அவரின் வாக்காளர் அடையாள அட்டையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உண்மை கசக்கத்தான் செய்யும் என்று மீண்டும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்தப் பேட்டியில் “ஒருவரின் பெயரை வைத்து அவரின் மதத்தை நிர்ணயிப்பது சிறுபிள்ளைத்தனமானது. நான் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது பள்ளி நிர்வாகம் அளித்த விண்ணப்பித்தில் மதம், சாதியில் இந்தியன் என்றே குறிப்பிட்டேன். பள்ளி நிர்வாகம் நீங்கள் தவறாக விண்ணப்பித்துள்ளீர்கள் என்றார்கள். நான் கூறினேன் நான் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவன். எனது மனைவி இந்துக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது நாங்கள் என்ன மதம் என்று அந்த தலைமையாசிரியரிடம் கேட்டேன்.. இரண்டு மதத்தையும் சேர்த்து ஏதாவது மதம் உள்ளதா என அவர்களிடம் கேட்டேன்..

என் மகனின் நான்கு வயதில் அவன் இந்த மதம் என்று முத்திரை குத்தப்பட நான் விரும்பவில்லை. அவன் மனிதன் என்ற முத்திரை குத்தவே நான் விரும்பினேன். அதனாலேயே அவனை மனிதன் என்று சேர்த்துவிட்டேன். அந்தப் பள்ளி நிர்வாகம் ஒன்றுமே கூறவில்லை. சேர்த்துக் கொண்டார்கள். இன்றுவரை விஜய் மனிதனாக இருந்து கொண்டு இருக்கிறார்.

பெயரைப் பற்றி கவலைப்படாதீர்கள். பெயர் ஜோசப்பாக இருக்கலாம், வேறு ஏதாவதாக இருக்கலாம். பெயரில் ஒன்றும் கிடையாது. நமது நடத்தையில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களுக்கு மனிதம்தான் மதம்” என பதிலடி கொடுத்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.