“ஏன் தான் அந்தப்படத்தை ஆரம்பித்தேனோ?” – மெகா சோகத்தில் பாண்டிராஜ்..!

ஆக்‌ஷன், ரொமாண்டிக் ஏரியாவில் கதகளி ஆடுபவர் சிம்பு. பாண்டிராஜோ கிராமத்து ஏரியாவில் பசங்களுடன் குச்சுப்புடி ஆடுபவர். இவர்கள் இரண்டுபேரும் இணைவது என்பது உண்மையிலேயே ஒரு புதுவிதமான காம்பினேஷன் தான் என இண்டஸ்ட்ரியே கண் வைத்தது.. ஆனால் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு’ படத்திற்காக சிம்புவை அணுகியபோது சிம்புவிடம் பாதி எடுத்தும், பாதி எடுக்கப்படாமலும் .வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்கள் வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஏனோ கவனிக்க தவறிவிட்டார்.

சரி.. ஒரு ஸ்டார் படம் இயக்குவோம் என அவர் எடுத்த முடிவு என்னவோ நல்ல முடிவுதான். ஆனால் இந்தப்படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரே சொந்தமாக தயாரிக்கிறேன் என்று சொன்னபோதாவது சுதாரித்திருக்கவேண்டும். சிம்புவுக்காக டி.ஆரிடம் கதை சொன்னபோது அது அவருக்கு பிடித்துப்போகவே, பாண்டிராஜிடம் பேசிய டி.ஆர், 5 கோடி தந்து விடுகிறேன்.. சிம்புவின் சம்பளம் இல்லாமல் படத்தை முடித்து விடுங்கள் என்றார். பாண்டிராஜும் மனதில் ஏதேதோ கணக்குப்போட்டு ஓகே என்றார். ஒரு மிகப்பெரிய சேனலுக்கு 1௦ கோடிக்கு படத்தை தருவதாக பேசி வைத்திருந்த டி.ஆர், இதிலேயே சிம்புவின் சம்பளமாக 5 கோடி பார்த்து விடலாம், தவிர பிசினஸ் பண்ணும்போது கிடைப்பது தனி லாபம் என கணக்கு போட்டிருந்தார்.

படத்திற்கு கதாநாயகி தேடியபோது, சம்பந்தப்பட்ட சேனலே நயன்தாராவை ஒப்பந்தம் செய்யுங்கள் என சொல்ல, பாண்டிராஜூக்காகவோ, சிம்புக்காகவோ சம்ம்மதிக்காத நயன்தாரா அந்த சேனல் கேட்டுக்கொண்டதால் தான் சம்மதித்தார். அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையும் டி.ஆர் தான் கொடுக்கவேண்டும். பார்த்தார் டி.ஆர்.. உடனே அந்த சேனலிடம் இன்னும் ஐந்துகோடி வேண்டும் என பேசினார். சேனலும் ஓகே சொல்லிவிட்டது.

ஆக இதன்மூலமே கிட்டத்தட்ட 7கோடி ரூபாய் லாபம் உறுதியாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் சிம்பு-நயன்தாரா நடிப்பதால் பிசினஸ் வேல்யூ ஏறிவிட படத்தை கிட்டத்தட்ட நாற்பது கோடி வரை பிசினஸ் பண்ண ஐடியாவும் வைத்திருக்கிறாராம் டி.ஆர். இதையெல்லாம் பார்த்த பாண்டிராஜ் இவ்வளவு லாபம் வருகிறதே எனக்கு கொஞ்சம் சேர்த்துக்கொடுங்கள் என கேட்டதுதான் தாமதம், டெண்சனாகிவிட்டாராம் டி.ஆர்.

பாண்டிராஜிடம், என் பணத்தை போட்டுத்தான் இதுவரை படம் எடுக்கிறேன், நீ உன் கம்பெனி சார்பாக ரெண்டு கோடியை இறக்கு என்றாராம். கேட்டது ஒரு குத்தமாய்யா என நொந்துபோன பாண்டிராஜ், தன்னால் முடியாது என சொல்லிவிட்டார். அப்படியா, அப்பா என் வேலைய காட்டுறேன் பார் என கொதித்த டி.ஆர், தனது இளைய மகன் குறளரசனை அழைத்து நான் சொல்லும் வரை இசையமைப்பு பணிகளை தொடாதே என உத்தரவு போட்டுவிட்டாராம்.

இதனால் நொந்துபோன பாண்டிராஜ். இந்தப்படத்தையே நம்பிக்கொண்டிருந்தால் சிம்பு மாதிரி வருடக்கணக்கில் விட்டத்தையே பார்த்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான் என்பதால், உடனடியாக சூர்யாவுடன் இணைந்து ‘ஹைக்கூ’ பட தயாரிப்பு மாறும் டைரக்சனில் இறங்கிவிட்டாராம். ஆக சிம்புவின் தந்தையே தயாரித்தாலும் கூட, சிம்பு படம் என்றால் தாமதமாகத்தான் வரும் (வருமா..?) என்கிற செண்டிமெண்ட் சும்மா விடாது என்றுதான் தெரிகிறது.