“நாய்க்கே நாலு நாளில் தெரிந்துவிட்டது” ; கருப்பி ரகசியம் உடைத்த கதிர்..!


மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.

திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை.. மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..

என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான் நடக்கவே முடிந்தது.