நான் ஜெயித்ததும் வலிமை அப்டேட் கிடைக்கும் ; பாஜக தலைவர் கிண்டல்


ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.. அஜித்தாவது ரசிகர்களுக்கு வெளியூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தன்னை பற்றிய அப்டேட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறார். ஆனால் வலிமை பட தயாரிப்பாளரோ படம் சம்பந்தமான தகவல்கள் எதையும் வெளியிடாமல் சிதம்பர ரகசியமாக வைத்து வருகிறார்.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர்களில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசனிடம் இதேபோல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். தற்போது கோவை தெற்கு பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர், ரொம்பவே கூலாக, “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி.” என கிண்டலாக பதில் அளித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கும் நிலைக்கு வலிமை அப்டேட் வந்துவிட்டது ஆச்சர்யம் தான்.