பாபி சிம்ஹா படத்தை விடாது துரத்தும் சிக்கல்..!


இதுவும் கூட ஒரு சென்சார் சம்பந்தப்பட்ட செய்திதான்.. சில மாதங்களுக்கு முன்பு ஆனந்த் கிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் ‘மெட்ரோ’. இப்படம் ரிலீஸாவதற்கு முன் தணிக்கைக்கு விண்ணப்பித்தபோதே பல பிரச்சனைகளை சந்தித்தது.

“வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது. செயின் பறிப்பு சம்பவங்களை முன்வைத்து படமாக்கி இருக்கிறீர்கள். ஆனால், செயின் பறிப்பு முறைகளை சமூக விரோதிகள் கற்றுக் கொள்ளும் வகையில் காட்சிகள் இருக்கிறது. இதனை தணிக்கை செய்ய முடியாது” என்று தெரிவித்துவிட்டனர்.

தணிக்கை மறுப்பைத் தொடர்ந்து, மறுதணிக்கைக்குச் சென்றது ‘மெட்ரோ’ படக்குழு. மறுதணிக்கையில் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கினார்கள். ஜூன் 24ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இப்போது மீண்டும் ஒருமுறை தணிக்கை குழுவினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகி இருக்கிறது ‘மெட்ரோ’.. ஏற்கனவே இருந்த சென்சார் அதிகாரிகளின் முன்விரோதமும் கூட இதில் செர்ந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்றால், தொலைக்காட்சி திரையிடலுக்கு என சில காட்சிகளை நீக்கி தனியாக தணிக்கை செய்ய வேண்டும். அதனாலேயே தற்போது ‘மெட்ரோ’வுக்கு தணிக்கை மறுக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணனிடம் கேட்டால், விரக்தியாக வெளிப்படுகிறது அவரது பதில்

“படம் வெளியான சில நாட்களிலேயே, 10 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டு தொலைக்காட்சி தணிக்கைக்கு விண்ணப்பித்தோம். காட்சிகளை நீக்கினாலும் இன்னும் செயின் பறிப்பு சம்பவங்கள், வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை தணிக்கை செய்ய முடியாது என மறுத்துவிட்டார்கள். தற்போது என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறேன்” என்கிறார்.

சென்சார் அதிகாரிகள் கூறுவதைப் பார்த்தால் மொத்த செயின் பறிப்பு காட்சிகளை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் படத்தின் மொத்த கதையுமே போய்விடும். இப்பிரச்சினையால் எனது அடுத்த படத்தைக் கூட தொடங்க முடியாமல் இருக்கிறாராம் ஆனந்த் கிருஷ்ணன்.