ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்..!


ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக கிட்டத்தட்ட மறைமுகமாக அறிவித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள பல கட்சி தலைவர்களும் ரஜினியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காதவர்களும் கடுமையாக ரஜினியை எதிர்த்து வரக்கூடாது என பேசி வருகின்றனர். அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம்..

ஆனால் ரஜினியின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கூட ரஜினியை விமர்சனம் செய்யும் போக்கு அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. சில தினங்களுக்கு முன் நடிகை கஸ்தூரி, ரஜினியின் பேச்சு குறித்து கிண்டலடித்திருந்தார்.. ஆனால் தான் ரஜினி ரசிகை என சப்பைக்கட்டும் கட்டினார். இப்போது காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜியின் முறை..

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என நானும் 25 வருடங்களாக காத்திருந்தேன். ஆனால் அந்த பொறுமையை தற்போது இழந்துவிட்டேன். எனது 65 வயது மாமனாரிடம், 10 விஷயங்களை சொன்னால், அதில் இரண்டு விஷயத்தைதான் செய்கிறார். அதை செய்ய அவரின் உடலிலும், மனதிலும் வலு இல்லை.

அதனால் தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதில் தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார். நானும் அதையே விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் எந்த மாதிரி திட்டங்களை அவரிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்க முடியும். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் லாரா மிகச் சிறந்த வீரர் தான். ஆனால் இப்போது அவரால் அப்படி ஆட முடியுமா?. அதுபோலத் தான் ரஜினியின் அரசியலும்.” என்று விமர்சித்துள்ளார்..

கூடவே இதனால் ரஜினி ரசிகர்களின் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோமோ என பயந்து “நான் எப்போதும் ரஜினியின் ரசிகன் தான். அவரை முன்னுதாரணமாக கொண்டு வாழ நினைப்பவன்தான்” என இரண்டு வசனங்களையும் சேர்த்துக்கொண்டுள்ளார் பாலாஜி.