‘சர்கார்’ கதை விவகாரத்தில் ஒருதலை பட்சமாக முடிவெடுத்த பாக்யராஜ் ; அம்பலமான உண்மை..!


துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘சர்கார்’. வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தபடம் கடந்த ஒரு மாத காலமாகவே கதை சர்ச்சை என்கிற சூறாவளியில் சிக்கி தவித்து வருகிறது.

அதாவது ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளரும், துணை இயக்குநருமான வருண் ராஜேந்திரன் என்பவர், ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில், சர்கார் படத்தின் கதை, தனது செங்கோல் என்கிற கதையில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. நான் ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு, இந்தக் கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின் பேரில், எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் விசாரணை நடத்தி இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான் என, அதாவது செங்கோல் கதையை காப்பியடித்துதான் சர்கார் உருவாக்கப்பட்டுள்ளது என தீர்ப்பு (?!) கூறியுள்ளார்.

ஏற்கனவே கஜினி மற்றும் கத்தி படங்களும் கதை விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியதால், பாக்யராஜின் இந்த தீர்ப்பை பார்ப்பவர்கள் சர்கார் கதையும் திருடப்படதுதான் என சுலபமாக நம்பிவிடுவார்கள். ஆனால் இந்த சர்ச்சையில் விஜய்க்கு எதிரான மிகப்பெரிய அரசியல் ஒளிந்திருப்பதும் அதனால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக பாக்யராஜை வைத்து சமார்த்தியமாக காய் நகர்த்தப்பட்டு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை என்பதை பாக்யராஜின் அவசரக்குடுக்கை தனமான செயல்பாடுகளே வெளிப்படுத்தியுள்ளன.

ஆம். இந்த விஷயத்தில் வருண் ராஜேந்திரனுக்கு சாதகமாக ஒருதலை பட்சமாகவே ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டுள்ளார் பாக்யராஜ். காரணம் இந்த வருண் ராஜேந்திரனும் பாக்யராஜும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றின் டெலிபிலிம் தயாரிப்பில் இணைந்து பணியாற்றியவர்கள். அப்போதிருந்தே நட்பில் உள்ளவர்கள்.

அதுமட்டுமல்ல, வருண் ராஜேந்திரன் இந்தக்கதையை சூர்யகிரண் என்பவரிடம் சொன்னதாகவும் அவர் தனது நண்பரான ஸ்டில் போட்டோகிராபர் விஜய் என்பவரிடம் சொன்னதாகவும், இந்த விஜய் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர் என்பதால் செங்கோல் கதை இப்படித்தான் ஏ.ஆர்.முருகதாஸின் காதுகளுக்கு போனதாகத்தான் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சூர்யகிரண் யார் தெரியுமா,..? பாக்யராஜின் மௌன கீதங்கள் படத்தில் அவரது மகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பாக்யராஜின் அன்புக்கு பாத்திரமானவர். இவர்களது பல வருட பாசம், வருண் ராஜேந்திரனின் பதினைந்து ஆண்டு கால நட்பு இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டாலே பாக்யராஜ் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பதை எந்த சாமானியனும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.. ஆனால் புகார் அளித்தவர்களுக்கும் தனக்குமான நெருக்கமான தொடர்பை பாக்யராஜ் வசதியாக மறைத்துவிட்டார்.

மேலும் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்த பின்னால் எழுத்தாளர் சங்க விசாரணைக்காக தனது ‘சர்கார்’ படத்தின் சினாப்சிஸ் என்கிற ஆறு பக்க கதை சுருக்கத்தையும், படத்தின் மொத்த பவுன்டட் ஸ்கிரிப்ட்டையும் தனித்தனியான கவரில் போட்டு சீல் வைத்து சங்கத்தில் சமர்ப்பித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் இதில் சினாப்சிசை மட்டுமே பிரித்து படித்த பாக்யராஜ் பவுன்டட் ஸ்கிரிப்ட்டை பிரிக்க கூட இல்லை.

சினாப்சிஸில் உள்ள முக்கிய சாராம்சமான, ஹீரோவின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு விட்டார்கள் என்கிற லைனையும், வில்லன் அரசியல்வாதி என்கிற’ லைனையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்ட பாக்யராஜ் கண்ணை மூடிக்கொண்டு இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என தீர்ப்பெழுதி விட்டார்.

சங்கத்தில் இடம்பெற்றுள்ள மற்ற 12 இயக்குனர்களில் 5 பேர் மட்டுமே பாக்யராஜின் இந்த தீர்ப்புக்கு ஆதரவாக கையெழுத்து போட்டுள்ளனர். மீதி 7 பேரில் ஐந்து பேர் பாக்யராஜின் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என்றும், இன்னும் 2 பேர் எந்த கருத்தும் சொல்லவில்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருக்கையில் பெரும்பான்மையானவர்களின் கருத்துப்படி தாங்கள் முடிவெடுத்துள்ளதாக அப்பட்டமான பொய்யை தனது கடிதம் வாயிலாக கூறியுள்ளார் பாக்யராஜ்.

இதில் அவரே கவனிக்காமல் விட்டுவிட்ட இன்னொரு தவறும் அவர் ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அதாவது இந்த கதை சர்ச்சை குறித்து விசாரித்த பின்னர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இரண்டு கதைக்குமான ‘ஸ்பார்க்’ ஒரே மாதிரி இருக்கிறது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் வருண் ராஜேந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில் செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

இதில் ‘ஸ்பார்க்’ என்கிற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு காதலர்கள் இருவர் தங்கள் காதலை பிரச்சனையின்றி நகர்த்தி சென்று இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நினைக்கிறார்கள். இதற்காக காதலி வீட்டிற்கு காதலனும் காதலன் வீட்டிற்கு காதலியும் சென்று தங்களை யாரென்றே காட்டிக்கொள்ளாமல் அவர்களது அன்பை சம்பாதித்து தங்களது திருமணத்தை அனைவரின் ஒப்புதலோடும் முடிக்கிறார்கள். இதே ஸ்பார்க்கை வைத்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘பூச்சூடவா’, ‘ஜோடி’ என ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வந்தன. அனைத்தும் வெற்றியும் பெற்றன. அங்கே கதை திருட்டு என்கிற குரலே எழவில்லை.

அவ்வளவு ஏன் வெறும் இரண்டு வரிகளை வைத்து தற்போது ஒருதலை பட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ள பாக்யராஜ், முப்பது வருடங்களுக்கு முன் ‘சின்ன வீடு’ என்கிற படத்தை எடுத்தார். கட்டாய திருமணத்தால் தனக்கு வாய்த்த மனைவி அவலட்சணமாக இருப்பதால், தனக்குபிடித்த அழகான பெண்ணை சின்ன வீடாக செட்டப் செய்கிறான் நாயகன். பின் ஒருகட்டத்தில் மனம் திருந்தி மனைவியை நாடி வருகிறான் என்பதுதான் அந்தப்படத்தின் கதை.

ஆனால் இதே கதைதான் அதற்கு முந்தைய வருடம் மணிவண்ணன் இயக்கத்தில் மோகன்-சுகாசினி-ராதா நடிப்பில் வெளியான ‘கோபுரங்கள்’ சாய்வதில்லை’ படத்தின் கதையும். இதில் ஸ்பார்க் என்பதையும் தாண்டி பாதிக்கதையையே சுட்டிருந்தார் பாக்யராஜ். ஆனால் அப்போது மணிவண்ணன் கதை திருட்டு என பாக்யராஜ் மேல் குற்றம் சாட்டவில்லையே..

காரணம் ஒரு கதைக்கான ஸ்பார்க் என்பது ஒரேபோல இரண்டு பேருக்கோ, பத்து பேருக்கோ கூட தோன்றலாம். அதை வைத்து அவர்கள் எப்படி கதையை உருவாக்குகிறார்கள், எப்படி திரைக்கதையால் வித்தியாசப்படுத்துகிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜியும், நடிகர் கமல்ஹாசனும் தங்களது ஓட்டு வேறு யாராலோ கள்ள ஓட்டாக போடப்பட்டது என்பது தெரிந்து வாக்குச்சாவடியில் இருந்து திரும்பி வந்தார்கள் என்பது நாடறிந்த விஷயம். இதை வைத்து கதை பண்ணவேண்டும் என்றால் யாருக்கு வேண்டுமானாலும் அந்த உரிமை உண்டு. அந்த ஸ்பார்க் பத்து வருடத்திற்கு முன் ஒருவருக்கு தோன்றி இருக்கலாம். இன்னொருத்தருக்கு சமீபத்தில் கூட தோன்றி இருக்கலாம். அதை யார் எப்படி படமாக கொடுக்கிறார்கள், அந்த காட்சிகளில் இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதா என்பதைத்தான் ஆராயவேண்டும். அதற்கு பவுண்டட் ஸ்கிரிப்ட்டை முழுமையாக படித்து பார்த்தால் தான் முழு உண்மையும் புரிய வரும். இல்லை எடுக்கப்பட்ட படத்தை பார்த்தால் தான் தெரியவரும். ஆனால் பாக்யராஜோ பவுண்டட் ஸ்கிரிப்ட்டை படிக்கவேயில்லை.

ஏ.ஆர்.முருகதாஸுக்கு இந்த ஸ்பார்க் தோன்றியதும் அதை கதையாக மாற்றி இருக்கிறார். தற்போது விஜய்யை வைத்து அந்த கதையை படமாக்கி இருப்பதால் சமகால நிகழ்வுகளை வைத்து அந்தப்படத்தை இயக்கியுள்ளார். ட்ரெய்லரை பார்க்கும்போதே நமக்கு இது நன்றாக தெரிகிறது. அப்படி இருக்கையில் பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக சொல்லப்படும் கதையில் இந்த காட்சிகள் எப்படி இடம்பெற்றிருக்க முடியும் என்கிற லாஜிக்கை பாக்யராஜ் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. படத்தை திரையிட்டு காட்டுகிறேன் என கூறிய ஏ.ஆர்.முருகதாஸின் கோரிக்கையையும் அவர் நிராகரித்துவிட்டார்.

இந்தப்பிரச்சனையில் முக்கிய நபராக கருதப்படும் ஸ்டில் போட்டோகிராபர் விஜய்யை அவர் நேரில் வரவழைத்து விசாரிக்கவே இல்லை. போனில் தொடர்புகொண்டு பேசியதாக கூறி விசாரணையை கேலிக்கூத்தாகி இருக்கிறார் பாக்யராஜ்.

இதில் இன்னொரு விஷயத்தை சொன்னால் அதிர்ச்சிதான் ஏற்படும். சங்கத்தில் இந்த விசாரணைக்கு வந்த முருகதாஸிடம், வருண் ராஜேந்திரனுக்கு ஒரு நல்ல தொகையாக கொடுத்து செட்டில் செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார் பாக்யராஜ். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லாத காரணத்தினால் அதற்கு உடன்பட ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துவிட்டார். இது பாக்யராஜின் கோபத்தை கிளறி, அவரது ஈகோவை தூண்டிவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நீதிமன்றத்தின் மூலமாக தான் சந்தித்துக்கொள்வதாக முருகதாஸ் கூறியதும், அவசர அவசரமாக ‘சர்கார்’ படத்தின் கதை திருடப்பட்டதுதான் என, தான் அளித்த தீர்ப்பின் ஒரு பக்கத்தை வேண்டுமென்றே மீடியாவுக்கு கசிய விட்டுள்ளார். இதுதான் தற்போது பலத்த அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரி இந்தப்பிரச்சனையின் இன்னொரு கோணத்தை பார்க்கலாம். இதற்கு முன்பாக கத்தி கதை என்னுடையது என 3 பேர் உரிமை கொண்டாடினர்.. ஒரு கதைக்கு மூன்று பேர் உரிமை கொண்டாடுகிறார்கள் என்கிறபோதே அந்த குற்றச்சாட்டு பல்லை இளித்துவிடுகிறதே. இது ஒன்றே போதும் அது முருகதாஸ் கதை என்பதற்கு.. அதனால் தான் அவரால் அந்த வழக்கி எளிதாக ஜெயிக்க முடிந்தது. வேண்டுமானால் பாக்யராஜே குறிப்பிட்டதை போல இவர்கள் மூன்று பேருக்கும் தோன்றிய ஒரேவிதமான ‘ஸ்பார்க்’ என்று வேண்டுமானால் கருத்தில் கொள்ளலாம்.

இதில் இன்னொரு விஷயத்தை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியாது. அதாவது மெட்ராஸ், கத்தி படத்தின் கதைகள் என்னுடையது என ஒருவர் ‘அறம்’ சார்ந்து உரிமை கொண்டாடினார்.. ஆனால் இங்கே மெட்ராஸ் கதை திருட்டை வசதியாக மறந்து அல்லது மறைத்துவிட்டு, கத்தி படம் மட்டுமே விமர்சனத்திற்கு உள்ளாகியது. ..

சரி கத்தி படம் திருட்டு கதை என்றே வைத்துக் கொள்வோம்.. கடந்தமுறை பட்ட அவமானத்தால் அந்த இயக்குனருக்கு அடுத்த படத்தை சுட்டு எடுக்க தோணுமா? புகார் சொல்வது என்றாலும் அதில் ஓரு லாஜிக் வேணாமா!?

சின்னவீடு கதையில் பாக்யராஜ் செய்தது சரி என்றால் தெறி, மெர்சல் படத்தில் இயக்குனர் அட்லி செய்ததும் சரி தானே.. ஆனால் அட்லியை மட்டுமே ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்..? காரணம் இந்த கதை விவகாரங்களில் டார்கெட் பண்ணப்படுவது ஏ.ஆர்.முருகதாசோ அல்லது அட்லியோ அல்ல.. நடிகர் விஜய்யை குறி வைத்துத்தான் ஒவ்வொரு முறையும் பிரச்சனை கிளப்பப்படுகிறது. அதற்கு கதை திருட்டு என்கிற முகமூடியை பயன்படுத்துகிறார்கள்.

விஜய்யின் தலைவா படத்தில் இருந்து கவனித்து பார்த்தால் அரசியல் ரீதியாக ரிலீஸுக்கு முன்போ அல்லது பின்போ விஜய் படத்திற்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப்பட்டு வருவதை நன்கு உணரமுடியும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்திற்கு எந்த புண்ணியவானும் கதை திருட்டு என்கிற புகாரை கொண்டுவரவில்லையே ஏன்..? காரணம் படத்தின் ஹீரோ விஜய் அல்ல.. வேறு ஒருவர் என்பதுதான்.

விஜய் படங்கள் மீது ஆளுங்கட்சி ஏவிய அடக்கு முறை அஸ்திரம் ஒரு பக்கம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.. மெர்சல் படத்திற்குப்பின் அவர் மீதான மத துவேசங்கள் அதிகமாகி, இன்னொரு தரப்பும் அவரை மத ரீதியாக டார்கெட் பண்ணுவதற்காக இப்படி கதை திருட்டு என்கிற பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார்களோ என்கிற வலுவான சந்தேகமும் எழுகிறது.

மொத்தத்தில் இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்கிற பெயருக்கு சொந்தக்காரர் ஆன இயக்குனர் பாக்யராஜ் ‘சர்கார்’ கதை குறித்த ஒருதலை பட்சமான தீர்ப்பு மூலமாக தனது பெயருக்கு தானே களங்கத்தை உண்டு பண்ணிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.