“இசையையும், கலையையும் பிரித்துவிட்டு மொழி தனித்து இயங்க முடியாது” – சீமான்

தமிழில் பிரபலமான ஒளிப்பதிவாளர் திரு.செழியன் அவர்கள். இவர் ‘கல்லூரி’,தேசிய விருதுப் படங்கள் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ போன்ற பல படங்களில் பணிபுரிந்துள்ளார். ஒளிப்பதிவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த செழியன், ஓர் இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். இந்தப் பள்ளி சென்னை, சாலிகிராமம், 111, துரையரசன் தெருவில், THE MUSIC SCHOOL என்ற பெயரில் தொடங்கப் பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. பிரபல கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இதில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குனருமான சீமான், இயக்குனர் பாலா, பாடகர் மனோ, இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஓவியர் மருது ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் சீமான் பேசும்போது,

“இசை என்பது மொழி, நாடு, இனம் கடந்தது என்பார்கள். ஆனாலும் ஒரு மொழி இசையையும், கலையையும் பிரித்துவிட்டு தனித்து இயங்க முடியாது. இலக்கியத்தையும், கலையையும், இசையையும் பிரித்துவிட்டால் மொழிக்கு சிறப்பில்லை. “ஒரு காலத்தில் தமிழர்கள் கலைகளை ‘கூத்து’ என்று இழிவாக எண்ணிப் புறந்தள்ளினார்கள். கூத்து ,நாடகம், பாட்டு, என்பதனை புறக்கணித்ததன் விளைவு, இன்று வலிமைமிக்க திரை ஊடகத்தினைக் கூட பிறமொழி பேசுவோர் ஆக்கிரமித்து விட்டனர். ஆனால் கால மாற்றத்தில் இப்போது நிலைமை சற்று மாறியுள்ளது. இசையை ஒரு கல்வியாக பார்க்கும் சூழல் இன்று வந்துள்ளது.

“எங்கோ பண்ணைப்புரத்திலிருந்து வந்து இசைஞானி இசையில் சாதனை படைத்தார். அதேபோல எங்கோ சிவகங்கையில் பிறந்த செழியன் தனக்குத் தெரிந்த இசையறிவை இந்த தலைமுறைக்கு கொடுக்க விரும்பி இந்த இசைப் பள்ளியை தொடங்கியுள்ளார். இதை நிர்வகிப்பது அவருடைய மனைவி என்றாலும் செழியனின் பங்களிப்பு பெரிதும் உள்ளது. இதற்காக பல நூல்களை பல பாகங்களாக எழுதியுள்ளார்.
“இன்றைய தமிழ்ச்சமூகம் இசையை ஒரு கல்வியாகப் பயின்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தருணத்தில், ‘ஓர் இசைப்பள்ளி தொடங்கும்போது பல மனநல மருத்துவ மனைகள் மூடப்படுகின்றன’ என்கிற கவிஞன் அறிவுமதியின் கருத்தினை நான் வழிமொழிகிறேன். இந்த இசைப் பள்ளி முயற்சியை வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு சீமான் பேசினார்.

நிகழ்ச்சியில் கவிஞர் தமிழச்சி பேசும்போது,

“கவிதைக்கு மொழி ஆடை கட்டுகிறது என்றால், இசை இறக்கை கட்டுகிறது என்பார்கள்.“இசையறிவு ஒரு மகா சக்தியாகும். ஓர் இசைப்பள்ளி தொடங்குவது ஒரு நூலகம் தொடங்குவதற்குச் சமம்.ஓர் இசைப்பள்ளி தொடங்குவது பல மனநலக் காப்பகங்கள் மூடுவதற்குச் சமம்.“இசை பல நோய்களை குணப்படுத்துகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. உலகில் மொழி, இனம், மதம் கடந்து மக்களை இன்று இசை இணைப்பதைப் பார்க்கிறோம்.

“ஈரான் நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை அறிந்து வியப்பு கொண்டேன். சீனப்பேமாட் என்கிற ஒரு மரணதண்டனை கைதியிடம் உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்டபோது அவன், “எனக்கு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் பிரபலமான ‘மே’ என்கிற புல்லாங்குழலை வாசிக்க வேண்டும்” என்றிருக்கிறான். அங்கு அவனால் கொலையுண்டவரின் குடும்பத்தாரும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை பார்க்க வந்திருக்கிறார்கள் அவன் வாசித்த புல்லாங்குழல் இசையைக் கேட்டு அவர்கள் மனமுருகி நின்றார்கள். அந்த நாட்டின் சட்டப்படி பாதிக்கப்பட்டவரின் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் ‘பிளட் மணி’ எனப்படும் தொகையை செலுத்தினால் ரணதண்டனையைத்தடுத்து நிறுத்தி வைக்கலாம் என்பது மரபு. அப்படி .17 வயதே ஆன அவனை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார்கள் .இதிலிருந்து இசையின் மகத்துவத்தை உணரலாம்.

“லெனின் இசையை எதிர்த்தவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் பீத்தோவன் இசையைக் கேட்டு மனித ஆற்றலுக்கு இவ்வளவு சக்தியா என்று வியந்திருக்கிறார்.“நுண்கலைகளில் இசைக்கு தனித்துவம் உண்டு. தமிழர்கள் மரபே இசை சார்ந்ததுதான் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை நமக்கு இசை மரபு உள்ளது.. நமது இசைக்கு நாட்டார் பாடல்கள் தொடங்கி நமக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

“ஒளிப்பதிவாளர் செழியனின் இன்னொரு முகம் பலரும் அறியாதது. அவர் இசை தொடர்பாக இதுவரை 15 நூல்களை எழுதி இருக்கிறார். அவரது மனைவி பிரேமா தொடங்கியுள்ள இந்த இசைப் பள்ளியில் மேற்கத்திய இசையுடன் நம் இசையும் கற்றுத் தரப்படுவதாக அற்கிறேன். இம்முயற்சி வரவேற்கத் தக்கது. வாழ்த்துக்கள்” என்றார்.

இந்த பள்ளியில் அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்க பயிற்சி அளிக்கப் படுகிறது.