பிறந்த நாளை முன்னிட்டு துபாயில் ஷாருக்கானுக்கு கவுரவம்


துபாய் நாடு சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் உலகின் மிக உயரமான ”புர்ஜ் கலிபா” கட்டிடம் அமைந்துள்ளது.

துபாய் மாநகராட்சியின் சுற்றுலாத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் “எனது விருந்தினராக வாருங்கள்” என்று துபாய்க்கு மக்களை அழைக்கும் 3 நிமிட விளம்பரப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஷாருக்கானின் 54-வது பிறந்தநாளையொட்டி துபாயில் உள்ள உலகின் மிக உயரமான ‘புர்ஜ் கலிபா’ கட்டிடத்தில் நேற்றிரவு லேசர் ஒளியால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

“பாலிவுட்டின் மன்னன் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று அந்த கட்டிடம் லேசர் ஒளியில் ஒளிரத் தொடங்கியதும் அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்.

மேலும், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓம்’ படப்பாடலின் பின்னணியில் நடனமாடிய நீருற்று அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஷாருக்கான் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் உரிமையாளரான எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

என்னை இத்தனை பிரகாசமாக ஒளிர வைத்ததற்கும் நான் எப்போதும் இருந்திராக உயரத்தில் என்னை வைத்ததற்கும் எனது சகோதரர் முஹம்மது அலாபருக்கு நன்றி. உங்களது அன்பும், கனிவும் அளப்பரியது. துபாயை நான் நேசிக்கிறேன். இது என்னுடைய பிறந்தநாள், நான் உங்கள் விருந்தாளி’ என ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.