முதல்நாள் அதிரடி.. மறுநாள் அந்தர் பல்டி ; சிம்புவின் இருமுகம்


மழை சீசன் வந்துவிட்டால் வானம்பாடி போல ஏதாவது கானம் பாடியே ஆகவேண்டும் நம்ம சிம்புவுக்கு.. அப்படித்தான் போனமுறை சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது பீப் பாடலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி எஸ்கேப் ஆனார். இப்போதும் விடாமல் மழை பெய்கிறது.. இதோ வானம்பாடி புதிதாக ஒரு பாட்டு பாடி பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஆம். செல்லாத நோட்டு, ஜி.எஸ்.டி என பிரதமர் மோடியை நடவடிக்கையை கிண்டல் செய்து மத்திய அரசுக்கு எதிராக ஒரு பாடலை பாடியுள்ளார் சிம்பு. இது ஆளும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. சிம்பு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் சிம்பு வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனைக்கண்டு அதிர்ந்துபோன சிம்பு, “ஒரு விஷயம் என்று வந்தால் அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த பாடலை பாடவில்லை. எனக்கு உண்மை என்று தோன்றியதை துணிந்து சொல்ல நான் பயப்பட மாட்டேன்” என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது “பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “பணமதிப்பிழப்பு பாடலை நான் எழுதவில்லை. எனது படத்திலும் இடம்பெறவில்லை. வேறு ஒரு படத்தில் இந்த பாடல் வருகிறது. பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது எனக்கு தெரிந்தது. நான் ஒரு பாடகர். பாடுவது எனது தொழில். பாடலில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன். அடுத்தவர்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை’ என அப்படியே பல்டி அடித்துள்ளார் சிம்பு..