வைரமுத்துவை பார்த்து சிம்பு கற்றுக்கொள்ள வேண்டும்…!


சில மாதங்களுக்கு முன் ஒரு விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து நீதிமன்றம் குறித்து கொஞ்சம் கடுமையாகவே விமர்சித்தார். இதற்கு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும், வைரமுத்து மீது வழக்கு தொடுத்தது என்னவோ ஒரு சினிமா பைனான்சியர் தான்..

இந்த வழக்குக்கான விசாரணையின்போது வைரமுத்து தரப்பில் இருந்து தான் உள்நோக்கத்துடன் அந்தமாதிரி பேசவில்லை. நீதிமன்றத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன் என கூறி தான் பேசியமைக்காக மன்னிப்பு கோரியிருந்தார். அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் வைரமுத்து பேசியது இந்த சமூகத்தில் ஒவ்வொரு சாமான்யனின் உள்ளத்திலும் நீதித்துறை மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை பிரதிபலிப்பதாகத்தான் இருந்தது.. அந்த அளவில் அவர் பேசியது சட்டப்படி தவறு என்றாலும் நியாயப்படி அது சரிதான்.. ஆனாலும் சட்டத்தை மதித்து இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் அதேசமயம் இங்கே ஒரு நடிகர் தான் செய்துள்ளது தவறான செயல் என்பதை அறிந்திருந்தும், அதற்கு நாடே கண்டனம் தெரிவித்து, நல்லவர்கள் எடுத்து சொல்லியும் கூட, தான் தவறே செய்யவில்லை என இன்னும் முரண்டு பிடித்துக்கொண்டு நிற்கிறாரே.. அவர்தாங்க.. ‘பீப் சாங்’ புகழ் சிம்பு.. மன்னிப்பு என்கிற ஒற்றை வார்த்தையை அவர் கேட்டிருந்தால் அந்த விவகாரம் அப்போதே முடிந்திருக்கும்..

ஆனால் சிம்புவின் வயதும், பக்குவமற்ற தன்மையும் அதை செய்யவிடவில்லை. பெரியவர்கள் பெரியவர்கள்தான் என்பதைத்தான் இந்த இரண்டு நிகழ்வுகளும் நமக்கு சொல்கின்றன. வைரமுத்துவை பார்த்தாவது சிம்பு கற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.