தொடர்ந்து ஞானவேல்ராஜாவால் மிரட்டப்படும் சிவகார்த்திகேயன்?

அமைதியாக இருந்த பிரச்சனை மீண்டும் புகைய துவங்கியுள்ளது போலத்தான் தெரிகிறது.. ஆம்.. சிவகார்த்திகேயன் பிரச்சனைதான்.. ‘ரெமோ’ நன்றி விழாவில் தன்னை வேலைபார்க்க விடாமல் சிலர் டார்ச்சர் செய்வதாக சிவகார்த்திகேயன் கண்ணை கசக்கியதில் இருந்து சூடுபிடித்தது விவகாரம்..

அதன்பின்னர் அலசியதில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ், ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜா ஆகியோர் சிவகார்த்திகேயன் தங்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு படம் பண்ணித் தர மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் குற்றம் சாட்டியதாகவும், அவர்கள் தான் சிவகார்த்திகேயனுக்கு எதிராக திரைமறைவு வேலைகள் செய்ததாகவும் சொல்லப்பட்டது..

அதில் மற்ற இரண்டு பேரிடம் அட்வான் வாங்கவில்லை என மறுத்த சிவகார்த்திகேயன், ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திடம் அட்வான்ஸ் வாங்கியதை ஒப்புக்கொண்டு வரும் காலத்தில் ஞானவேல்ராஜாவுக்கு படம் பண்ணிக்கொடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்பட்டு ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது..

ஆனால் இப்போது மீண்டும் அணைந்துபோன நெருப்பை பற்ற வைத்துள்ளாராம் ஞானவேல்ராஜா. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இனி வெளிப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது மார்க்கெட் வேல்யூ என்ன, அவரது படத்தின் பிசினஸ் வேல்யூ என்ன என்பதை ரஜினி முருகனும் ரெமோவும் தெள்ளத்தெளிவாக காட்டிவிட்டன.

இனி அவர் நடிக்கும் படங்களை அவரே தயாரிப்பார் என்பது சர்வ நிச்சயம்.. இதற்கிடையில் தற்போது தயாரிப்பாளர்கள் இருக்கும் ஒரு வாட்ஸாப்ப் குரூப்பில் சிவகார்த்தியினால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தனக்கு படம் கொடுக்கவில்லை எனில் தான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி இல்லை என மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு செய்தி உலவுகிறது.

இத்தனைக்கும் ரஜினி முருகன்’ ரிலீஸுக்கு முன்பு ஞானவேல்ராஜாவிடம் சிவகார்த்திகேயன் அட்வான்ஸ் வாங்கியது வெறும் பத்து லட்சம் தான். அதைக்கூட திருப்பித்தந்துவிடுவதாக சிவகார்த்திகேயன் சொன்னபோது, அவரது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தால் நான் லாபம் அடைந்திருக்கிறேன்.. எனவே அந்த பத்து லட்ச ரூபாயை சிவகார்த்திகேயனுக்கு அன்பளிப்பாக தந்ததாகவே நான் நினைத்துக்கொள்கிறேன் என ஞானவேல்ராஜா சொன்னதாகவும் சிலர் சொல்கிறார்கள்..

நிலைமை இப்படி இருக்க, திடீரென ஞானவேல்ராஜா இப்படி திடீரென தற்கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ் அனுப்பவேண்டியதன் பின்னணி என்ன..? சிவகார்த்திகேயனுக்கும் இவருக்குமான தொடர்பு ‘கேடி பில்லா கிலாடி ரங்கா’ வியாபாரத்துடன் முடிந்துவிட்டதே. அதில் கூட லாபம் என்றுதானே சொல்லியிருக்கிறார்.. அப்புறம் எதற்காக இப்படி மிரட்டல் அனுப்பவேண்டும் என்று கேட்டால் சிலர் அதற்கான காரணங்களையும் சொல்கிறார்கள்.

இன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் சரியாக ஓடவில்லை என சிலர் சொன்னால், கூட அந்தப்படம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பதுதான் உண்மை நிலவரமாம். இந்த விஷயம் ஞானவேல்ராஜாவுக்கும் தெரியவந்ததால், இந்த நேரத்தை பயன்படுத்தி சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரித்து உடனடி லாபம் பார்க்க நினைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது..

அதனால், தான் ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி, அதில் பத்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததை சாதகமாக்கி, உடனே படம் பண்ணி தரவேண்டும் என அவருக்கு இப்படி தற்கொலை மிரட்டல் மெசேஜ் அனுப்பிஇருக்கலாம் என்று சொல்கிறார்கள்..

ஆனால் விநியோகஸ்தர் தரப்பில் உள்ள ஒருவர் இது பற்றி சொல்லும்போது கிண்டலாக, “அப்படிப்பார்த்தால் இவர் தற்கொலை செய்யவேண்டும் என்றால் அதற்கு உண்மையிலேயே காரணமாக இருக்கும் சூர்யா, கார்த்தி இருவரை அல்லவா சொல்லவேண்டும்.. அந்த இருவரின் படங்களை தயாரித்து வெளியிட்டதில் தானே இவருக்கு தொடர்ச்சியாக நட்டம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தெருவில் மோதிரத்தை தொலைத்துவிட்டு, இருட்டாக இருக்கிறது என்பதற்காக வெளிச்சமாக உள்ள அடுத்த தெருவில் சென்று தேடினானாம் ஒருத்தன். அந்த மாதிரித்தான் ஞானவேல்ராஜாவின் செயலும் இருக்கிறது” என்று சொன்னாராம்.

ஆனால் இன்னும் சிலரோ, ஞானவேல்ராஜா ‘பாகுபலி’ படத்தை வெளியிட்டதில் நல்ல லாபம் பார்த்திருக்கிறார். இப்போது அல்லு அர்ஜுனை வைத்து படம் தயாரிக்க பூஜை போட்டிருக்கிறார். அவரது தயாரிப்பில் சிங்கம்-3’ நல்ல லாபத்தை தரப்போகிறது.. இப்டி வருமானத்துடன் இருக்கும்போது அவர் ஏன் தற்கொலை பண்ணிக்கொள்ளப்போகிறார்.. அதெல்லாம் சும்மா.. சிவகார்த்திகேயனை வழிக்கு கொண்டு வர அவர் நடத்தும் நாடகம் இது” என்கிறார்களாம்…

‘லிங்கா’ நாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ரஜினி வீட்டு முன் போராட்டம் நடத்தபோவதாக சொன்னார்கள்.. ‘புலி’யால் பாதிக்கப்பட்டவர்கள் விஜய்க்கு எதிராக கொடி பிடித்தார்கள்.. அதில் கூட ஒரு லாஜிக் இருந்தது.. ஆனால் ஞானவேல்ராஜாவின் செயலில் துளியும் லாஜிக் இல்லையே என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. சரி.. உண்மை என்னவோ, அது விரைவில் வெளிவரத்தானே போகிறது..?

தோல்வியில் இருக்கும் எத்தனையோ ஹீரோக்களுக்கு இப்போதிருக்கும் தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் கிளம்பி வந்து எங்களை வைத்து நீங்கள் படம் பண்ணிதான் ஆகணும் என சொன்னால் அந்த தயாரிப்பாளர்கள் செய்வார்களா?