ஒப்பந்தம் ரத்தாகவில்லை ; கெட்டிக்காரன் புளுகு இரண்டே நாள் தான்..!

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா..? ஆனால் மறைக்க முயற்சித்து இப்போது குட்டு வெளிப்பட்டு மாட்டிக்கொண்டுள்ளார் சரத்குமார். காரணம் எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்துவிட்டதாக, தேர்தல் முடிந்த மறுநாள் சரத்குமார் அறிவித்தார்.

ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டபோது இந்த ஒப்பந்தத்தை முறைப்படி திநகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டு பதிந்துள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம் என எஸ்.பி.ஐ சினிமாஸ் பக்கம் இருந்து இன்னும் தகவல் வராத நிலையில், சரத்குமார் மட்டுமே இப்படி சொல்லியிருப்பது நெருடலாக இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக பத்திரப்பதிவு அதிகாரிகள் தரப்பில் இருந்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர்சங்க நிலத்தின் குத்தகை ஒப்பந்தம் இன்னும் எஸ்.பி.ஐ சினிமாஸ் பெயரில் தான் இருப்பதாகவும், இருதரப்பினரும் மீண்டும் வந்து வாபஸ் வாங்கிக்கொள்வதாக கையெழுத்து போட்டால் தான் ஒப்பந்தம் ரத்து ஆகும் என்றும், ஆனால் இதுவரை அப்படி இருவரும் வந்து ஒப்பந்தத்தை முறிப்பதற்கான கையெழுத்து எதுவுமே போடவில்லை எனவும் உண்மையை போட்டு உடைத்துவிட்டார்கள்.

அப்படி என்றால் ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது என சரத்குமார் சொன்னதன் உண்மையான காரணம் என்ன..? அப்படி எடுத்தேன் கவிழ்த்தேன என நினைத்த மாதிரி நினைத்த நேரத்தில் ஒப்ந்தததை ரத்து பண்ண முடியுமா..? உண்மையில் நடந்தது, நடப்பது என்ன என விஷால் அணி களத்தில் இறங்கி சோதனை நடத்தவேண்டிய முதல் வேலை இதுவாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது.