கருத்து சுதந்திரத்திற்கு நிபந்தனை விதிக்கிறாரா சுஹாசினி..?

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.. திடீரென சுஹாசினி மைக்கை பிடித்து அப்படி ஒரு வார்த்தையை சொல்லும் வரை.. சொன்ன இடம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற, மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்.

அப்படி என்ன பேசிவிட்டார் சுஹாசினி..? “எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க. எப்படி தரமான ஆட்கள் தான் படத்துல நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும். நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க.

முதல்ல நீங்க வந்து இந்தப்படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இந்த கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க. அப்படி விட வேண்டாம், நீங்கள்லாம் இவ்வளவு குவாலிஃபைடா இருக்கும் போது, எதுக்கு மத்தவங்களை எழுதவிடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதுங்கன்னு வேண்டிக்கிறேன்”

இதுதான் சுஹாசினி பேசியது. ஆனால் சுஹாசினியின் இந்த பேச்சு உடனே சமூக வலைதளத்துக்கு போக, சுஹாசினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலரும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். எப்படி சமூக வலைத்தளங்களில் அவரவர்க்கு கருத்துக்களைச் சொல்ல உரிமை இருக்கிறேதோ, அதேபோலத்தான் சுஹாசினியும் அவருடைய கருத்தை சொன்னார். அது மறுக்கமுடியாத உண்மை..

பொதுவாக இதுவரை பத்திரிகையாளர்கள் தான் விமர்சனங்கள் எழுதி வந்தார்கள்.. எழுதி வருகிறார்கள். ஆனால் இன்று வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக், டிவிட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பலரும் உடனுக்குடன் படத்தின் நிறைகுறைகளை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அது படத்தின் முதல் நாள் ஓட்டத்தில் இருந்தே வசூலை பாதிக்கிறது என்பதும் உண்மைதான்…

இரண்டு வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களும், படத்திற்கு அதனால் ஏற்பட்ட நட்டமும் தான் சுஹாசினியை இப்படி முந்திக்கொண்டு சில வார்த்தைகளை பேசவைத்துவிட்டது. ஆனால் இதை சுஹாசினி இப்படி பட்டவர்த்தனமாக சொல்லியிருக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

காரணம் முன்பு, ஒரு தொலைக்காட்சியில் வாராவாரம் தராசுத்தட்டு ஒன்றை வைத்துக்கொண்டு, படங்களின் நிறை குறைகளை நிறுத்து நிறுத்து கூறுபோட்டவர் தானே சுகாசினி.. சேனலில் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் விமர்சிக்கும்போது, காசுகொடுத்து படம் பார்ப்பவனுக்கு அவனது கருத்தை சொல்ல உரிமை இருக்காதா என்ன..?

இங்கே பிரச்சனை ஒரு படம் எடுத்தவருக்கு மட்டும் நல்ல படமா.. இல்லை பார்ப்பவர்களுக்கும் நல்ல படமா என்பதில் தான்.. சீனியரோ, ஜூனியரோ நல்ல(விதமாக) படம் எடுத்தால், பாராட்டத்தானே போகிறோம் என்கிறார்கள் சமூக வலைதள விமர்சகர்கள்..