நயன்தாராவிடம் தோற்றுப்போன விஜய்


சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தை மீண்டும் அட்லியே இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என கடந்த சில நாட்களாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது நயன்தாரா இந்தப்படத்தில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதற்குமுன் நயன்தாரா, அவர் சினிமாவுக்கு அறிமுகமான காலகட்டத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். இத்தனைக்கும் அவர் ரஜினிக்கே ஜோடியாக நடித்தவரும் கூட. அதற்கடுத்து விஜய்யுடன் வில்லு படத்தில் ஜோடியாக நடித்தார். அதற்குமுன் குருவி படத்திலேயே விஜய்யுடன் அவர் நடிக்கவேண்டியது.. ஆனால் த்ரிஷா இடையில் புகுந்து அந்த வாய்ப்பை தட்டிப்பறித்தார் என்றும் அப்போது சொல்லப்பட்டது.

2௦௦9ல் வெளியான வில்லு படத்திற்குப்பிறகு தற்போது பத்து வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா. இவர் வில்லு படத்தில் நடித்த சமயத்தில்தான், அந்தப்படத்தின் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார். நயன்தாரா காதலருக்காக மதம் மாறவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகும் அளவுக்கும் அது தீவிரமான காதலாக இருந்தது.

இவர்கள் இருவரின் காதல் பற்றி விஜய்க்கும் தெரிந்தே இருந்தது. விழு ஷூட்டிங் சமயத்தில் அதைப்பற்றி விஜய்யிடம் பேசிக்கொண்டிருக்கும்போது தான் பிரபுதேவாவை திருமணம் செய்த பின்னரும் நடிப்பை தொடர்வேன் என்றாராம் நயன்தாரா. ஆனால் விஜய்யோ உங்களால் அப்படி இருக்க முடியாது, நிச்சயம் நீங்கள் திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டீர்கள்.. ஜோதிகா போல ஒரு குடும்பத்தலைவியாக மாறிவிடுவீர்கள் பாருங்கள் என அடித்து சொன்னார்.

ஆனால் அதன்பின் யார் கண்பட்டதோ தெரியவில்லை, பிரபுதேவா-நயன்தாரா காதலில் விரிசல் விழுந்தது. அதை தொடர்ந்து நயன்தாரா விரக்தியாக தமிழ் சினிமா பக்கமே வராமல் தெலுங்கிலேயே அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் தான் இயக்கிய ராஜா ராணி படம் மூலம் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார் இயக்குனர் அட்லி.

அந்தப்படம் நயன்தாராவுக்கு நல்ல பேரை வாங்கிக்கொடுத்ததால் அட்லியின் மீது நல்ல மரியாதை வைத்துள்ளார் நயன்தாரா. அதனால் தான் இப்போது விஜய் படத்தில் நடிக்க அழைத்ததும் உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த ஒன்பது வருடங்களுக்கு இடையே, ஒரு காதல் முறிவு, அதன்பின் கொஞ்சநாள் விரக்தியான வாழ்க்கை, அதன்பின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் புதிய காதல், அதை தொடர்ந்து தற்போது நல்ல தரமான படங்களில் நடிப்பது என நயன்தாராவின் ரூட்டே மாறிவிட்டது.

ஆனால் விஜய் முன்பு நயன்தாராவிடம் அடித்துச்சொன்னது போல நயன்தாரா திருமணமும் செய்துகொள்ளவில்லை.. படங்களில் நடிப்பதை நிறுத்தவும் இல்லை. சொல்லப்போனால் இத்தனை வருடங்களுக்கு பிறகும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் உச்சத்திலேயே தான் இருக்கிறது. அந்தவகையில் நயன்தாரா விஷயத்தில் விஜய்யின் கணிப்பு தோற்றுப்போனதாகவே சொல்லலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *