“தனுஷிடம் நான் ஏன் கதை கேட்க வேண்டும்” ; ராஜ்கிரண்..!

தனுஷ் முதன்முதலாக டைரக்சன் அவதாரம் எடுத்திருக்கும் படம் என்பதால் ‘பவர் பாண்டி’ மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாகி இருக்கிறது.. ஆனால் அவர் படத்தின் கதாநாயகனாக ராஜ்கிரணை தேர்ந்தெடுத்ததை பற்றித்தான் இன்றுவரை ஆச்சர்யமாக பேசுகிறார்கள்.. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் 27 வருடங்களுக்கு முன் ராஜ்கிரணை நடிகராக அறிமுகம் செய்தவர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா. இப்போது தனுஷை இயக்குனராக அறிமுகம் செய்வது ராஜ்கிரண்.. என்ன ஒரு விசேஷம் பார்த்தீர்களா..?

இந்தப்படத்திற்குள் ராஜ்கிரண் வந்ததே ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான்.. டைரக்டர் சுப்பிரமணிய சிவா, ஒரு நாள் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்று “அண்ணே.. ஒரு புது டைரக்டர்.. நல்ல கதை வைத்திருக்கிறார்.. நீங்க நடித்தால் நல்லா இருக்கும் என நினைக்கிறார்” என லேசாக ஆரம்பித்துள்ளார்.. அப்படியா கதையின் ஒன்லைன் மட்டும் சொல்லு என ராஜ்கிரண் கேட்டுள்ளார்..

இன்றைய தலைமுறையில் தாத்தாக்களுக்கான இடம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை.. மகன் தானொரு அப்பா ஸ்தானத்திற்கு மாறும்போது தன்னை வளர்த்து ஆளாக்கிய அப்பாவை மறந்துவிடுகிறான்.. பேரக்குழந்தைகளும் அவ்வழியே வளர்க்கப்படுகிறார்கள்.. ஆனால் இந்தநிலை வரும் தலைமுறையில் இருந்து மாறவேண்டும்.. அதனால் தாத்தா கேரக்டரை மையப்படுத்தி இந்த முழுப்படமும் நகர்கிறது.. நீங்கள் தான் அந்த தாத்தா கேரக்டரில் நடிக்கிறீர்கள்” என கூறினார்..

ராஜ்கிரண் சில வினாடிகள் யோசித்தவர், நல்லா இருக்கு, எதுக்கும் நாளைக்கு சொல்கிறேனே என கூறிவிட்டார்.. ஆனால் அன்றிரவே சிவாவுக்கு போன் செய்து இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் டைரக்டரை நாளை வரச்சொல் என கூறியுள்ளார்..

மறுநாள் கதைசொல்ல வந்து நின்ற தனுஷை பார்த்ததும் ஆச்சர்யத்தில் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்து போய்விட்டாராம்.. பின்னர்தான் தெரிந்ததாம் தனுஷ் தான் அந்தப்படத்தின் டைரக்டர் என்று.. உடனே தனுஷ் படத்தின் கதையை கேளுங்கள் என ஆரம்பிக்க, ராஜ்கிரண் “அதெல்லாம் வேணாம் நான் ஷூட்டிங்குக்கு எப்ப வரணும்.. அதை மட்டும் சொல்லுங்க” என்றாராம்..

இந்த விஷயத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட ராஜ்கிரண், “தனுஷ் இன்னைக்கு இருக்கும் உயரத்திற்கு அவர் டைரக்சன் பண்ணனும் என்றால் எந்த முன்னணி ஹீரோவை வைத்துக்கூட படம் இயக்க முடியும்.. ஆனால் என்னை வைத்து அவர் படம் பண்ண துணிந்திருக்கும்போது, நான் ஏன் கதை கேட்கவேண்டும்.. அவரது முதல் படம் நன்றாக வரவேண்டும் என்பதில் என்னைவிட அக்கறை உள்ளவர் அவர்தான்.. அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்..

மேலும், “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்குகிறேன் என்று உங்களது சேமிப்பை, உழைப்பை எல்லாம் கரைத்து விடுகிறீர்கள். அவர்களோ வளர்ந்து வேலைக்கு சென்று திருமணம் ஆகி குழந்தை குட்டி என ஆனபின், அவர்கள் வாழ்க்கை தான் அவர்கள் கண் முன்னே நிற்கும்.. போதாதென்று ஏதாவது ஒரு வீட்டை லோன் போட்டு வாங்கிவிட்டால் ஆயுசுக்கும் அதைக்கட்ட வேண்டும் என்கிற நெருக்கடியில் தன்னை பெற்றவர்களை கூட கடைசி காலத்தில் கஞ்சிக்கு தவிக்க விட்டு விடுகிறார்கள்..

பேரப்பிள்ளைகளுக்கும் தாத்தா என்கிற ஒட்டுதலும் பாசமும் இல்லாமல் போய்விடுகின்றன.. இனி அந்தநிலை உருவாகக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பவர் பாண்டியும் அதில் எனது கதாபாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது.. இப்படி ஒரு கேரக்டரை தந்த தனுஷுக்கு எனது நன்றி” என கூறியுள்ளார் ராஜ்கிரண்.

வரும் ஏப்-14ஆம் தேதி ‘பவர் பாண்டி’ ரிலீஸாகிறது.