கேளிக்கை வரி விஷயத்தில் தமிழக அரசு இறங்கி வராததற்கு காரணம் இதுதான்..!


கேளிக்கை வரி விதிப்பு நீக்கம் மற்றும் திரையரங்க கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்வதாக இல்லை.. மீண்டும் பேச்சுவாரத்தை நடத்தினாலும் வரியை குறைப்பதற்கு அரசு தயாராக இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார்.

மற்ற மாநிலங்களில் எல்லாம் இவ்வளவு அதிக வரி இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வரியை அரசு விதித்தது ஏன்..? இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்..? கேளிக்கை வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு வந்த அடுத்த சில நாட்களில், திரையரங்க முதலாளிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக டிக்கெட் கட்டண உயர்வு பற்றி அறிவிதத்து ஏன்..?

எல்லாம் காரணமாகத்தான். இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள்.. இப்போது ஆள்பவர் சினிமா துறை சாராத ஒருவர். சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம், ரசிகர்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கும் செல்வாக்கு காரணமாக ஆளாளுக்கு அரசியலில் நுழைய துடிக்கின்றனர்.. பலரும் முதல்வர் காண்கின்றனர்..

சினிமா என்கிற ஒன்று செழிப்பாக இருந்தால்தானே இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.. அதை கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து விலக்கி வைத்துவிட்டால், சினிமாக்காரர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு போராடுவதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பது ஆளுவோரின் கருத்து..

அதுமட்டுமல்ல, வரியை குறைக்கவேண்டும் என போராட்டம் நடத்தினால், கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு இப்படி வரியை குறைக்க சொல்கிறார்களே தவிர, தியேட்டர் கட்டணங்கள் அதிகமாக இருப்பது பற்றி இவர்கள் வாய்திறக்க மாட்டேன் என்கிறார்களே என சினிமாக்காரர்கள் மீது மக்களின் வெறுப்பும் கோபமும் திரும்பும் என அரசு கணக்குப்போட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அதன்விளைவாகத்தான் வரி குறைப்பு விஷயத்தில் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது தமிழக அரசு.

மற்ற மாநிலங்களில் இப்படி சினிமாக்காரர்கள் அரசியல் குறித்த ஆர்வம் காட்டாததால், அங்கே சினிமாவை ஒரு தொழிலாக மட்டுமே பார்ப்பதால், மதிய அரசின் ஜி.எஸ்.டி வரியை மட்டுமே வசூலிக்கிறார்கள்.. மாநில அரசுகள் தனியாக எந்த வரியையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.