எரிகிற நெருப்பில் விஜய் மீண்டும் எண்ணெய் ஊற்றலமா..?


விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவைகள் குறித்து விமர்சனங்கள் இடம் பெற்றிருந்தன. உடனே தமிழக பாஜகவினர் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக விஜய், ஒரு கிறித்துவர், அவரது பெயர் ஜோசப் விஜய் என்பதால் மத்திய அரசை விமர்சிக்கிறார் என அனல் கக்கினார் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா.

இந்நிலையில் மெர்சல் திரைப்படத்தை வெற்றியடைச் செய்த ரசிகர்களுக்கு நன்றி; ஆதரவு தந்த தலைவர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த அறிக்கை வெளியாகி உள்ள லெட்டர் பேடு தான்.. ஆம். எப்போதோ ஒருகாலத்தில் அச்சடிக்கப்பட்ட ஜோசப் விஜய் என்ற அவருடைய பழைய லேட்டர்பேடை தூசிதட்டி எடுத்து அதில் அறிக்கையை அடித்து மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளார் விஜய்.

கபாலியில் ரஜினி “நான் கோட் போடுறதுதான் உங்களுக்கு பிரச்சனைனா.. நான் கோட் போடுவண்டா” என அதிரடி பஞ்ச் பேசுவரே.. அதே பாணியில் “ஆமாண்டா நான் ஜோசப் விஜய் தாண்டா இப்ப என்ன அதுக்கு” என சவால் விடுவது போல தனது சுய அடையாளத்தை மறைக்காமல் விஜய்யும் கெத்து காட்டியிருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

அதேசமயம் ஜாதி, மதம் எல்லாம் கடந்து விஜய் என்பதுதான் அவருக்கான அடையாளம்.. அனைவரும் அவருக்கு பக்கபலமாக இருக்கும்போது, அவர்மீது எதை குற்றச்சாட்டாக வைத்தார்களோ அதையே ஊதி பெரிதாக்குவது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகாதா என்றும் ஒரு சாரார் கேட்கின்றனர்.