“ஜல்லிக்கட்டுக்கு நீ ஏன் குரல் கொடுக்கிற..?” ; சொந்த ஊரில் விமர்சனத்துக்கு ஆளான நடிகர்..!


ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பித்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த சில நாட்களாக உலக அளவில் அனைவராலும் பேசப்படும் பொருளாக மாறியது.. பலதரப்பிலும் இருந்து இதற்கு ஆதரவுகள் குவிந்தன.

அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து மம்முட்டி, நிவின்பாலி, அஜு வர்கீஸ், வினீத் சீனிவாசன், ஜெயராம் உள்ளிட்டோர் தமிழ இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தமிழ்நாட்டில் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது..

கேரளாவில் கூட பலரும் இவர்களது ஆதரவை பாராட்டினாலும் கூட, அதிலும் சில அதிருப்தியாளர்கள் இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு தந்த ஆதரவை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் நிவின்பாலியை கேரளா மக்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

“கேரளாவில் நடைபெற்ற எத்தனையோ போராட்டங்களில், குறிப்பாக தெருநாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தபோதெல்லாம் இவர்கள் வாய்திறக்காதது ஏன்..? முல்லை பெரியாறு விஷயத்தில் மௌனம் காத்தது ஏன்.. இப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசியிருப்பது உங்களது மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் வலுப்படுத்திக்கொள்வதற்காகத்தான்” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.