விஷாலின் அன்பும், ராஜ்கிரணின் பெருந்தன்மையும் : ‘சண்டக்கோழி 2’ வில்லன் அர்ஜெய்!

‘சண்டக்கோழி 2’ தந்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறார் அதில் வில்லனாக நடித்த நடிகர் அர்ஜெய்.

விஷால் – கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘சண்டக்கோழி 2.’இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இவர் விஷால் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்’ நான் சிகப்பு மனிதனி’ல் அறிமுகம் செய்யப்பட்டவர் .சற்றே இடைவெளிக்குப் பின் சண்டக்கோழி 2-ல் விஷாலுடன் மோதும் வில்லனாக உயர்ந்துள்ளார்.

சண்டக்கோழி 2 வாய்ப்பை லிங்குசாமி மூலம் பெற்றுள்ளார்.இது பற்றி அர்ஜெய் பேசும் போது, “என் நண்பர் மூலம் சண்டக்கோழி 2 படத்துக்கு நடிகர்கள் தேர்வாகும் ஆடிஷன் நடக்கிறது என்று அறிந்தேன். நான் நேரில் சென்றேன். இப்படித்தான் தேர்வானேன். இதைப் பற்றி அண்ணன் விஷாலிடம் பிறகு கூறினேன்.தன் மூலம் அறிமுகமா ன நான் இதில் வாய்ப்பு பெற்றதற்காக அவர் மகிழ்ந்தார். வாழ்த்தினார் ” என்கிறார் அர்ஜெய்.

படப்பிடிப்பு அனுபவம் எப்படி ? விஷாலுடன் நடித்தது பற்றி ?

“இந்தப் படத்துக்காக சுமார்70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆரம்பத்தில் நடிப்பது பற்றிப் பெரிதாகப் பேசாமல் தானுண்டு நடிப்புண்டு என்றிருந்த அண்ணன் விஷால் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் போது நன்றாகச் செய்யப் பெரிதும் ஊக்கப் படுத்தினார் .குறிப்பாக அந்தப் பஞ்சாயத்துக் காட்சியில் என் நடிப்பு சிறப்பாக அமைய பெரிதும் அக்கறை காட்டினார். ” என்றவரிடம் ராஜ்கிரண் மற்றும் வரலட்சுமியுடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்ட போது ,

” வரலட்சுமி எனக்கு சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தெரியும் . நண்பரும் கூட. அதனால் அவருடன் நடிப்பதில் பிரச்சினை இல்லை . ஆனால் ராஜ்கிரண் என்கிற பெரிய நடிகருடன் நடிப்பது எப்படி? திரையில் அவர் வந்து விட்டால் அவர் மட்டும் தானே தெரிவார் ? இந்தப் பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் என்னுடன் சகஜமாகப் பேசி என்னை ஊக்கப்படுத்தினார். நான் மட்டுமல்ல எல்லாரும் அந்த பஞ்சாயத்து காட்சியை பெரிதும் பலமாக எண்ணியிருந்தோம். அதை மட்டுமே மூன்று நாட்கள் எடுத்தார்கள்.முதல் நாள் படப்பிடிப்பு போனது. எனக்கு நாம் சரியாகச் செய்தோமா என்று பயமாக இருந்தது. மறுநாள் ராஜ்கிரண் சார் என்னை தம்பி இங்கே வா என்று கூப்பிட்டார்.நேற்று என்னை எதிர்த்து திமிராகப் பேசியது நன்றாக இருந்தது. ஆனால் அந்த தெனாவெட்டு போதாது. மேலும் வீரியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அதன்படி நடித்தேன். இப்போது எல்லாரும் பாராட்டுகிறார்கள். தன்னுடன் நடிக்கும் சக நடிகன் அறிமுக நிலையில் இருந்தாலும் பாராட்டி , தூண்டி ஊக்கம் தந்த அவரது பெருந்தன்மை வியக்க வைத்தது “என்கிறார் அர்ஜெய் .

படம் வந்ததிலிருந்து ஏகப்பட்ட போன் கால்கள் முகநூல் வாழ்த்துகள் என்று திக்குமுக்காடி வருகிறார் அர்ஜெய்.

இப்போது இவர் ‘தேவி.2. ‘,விஷாலுடன் ‘அயோக்யா ‘வரலட்சுமியுடன் ‘வெல்வெட்நகரம் ‘உள்ளிட்ட 5 புதிய படவாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்.

சண்டக்கோழி 2 ஒரு நம்பிக்கை வில்லனை நமக்கு அடையாளம் கண்டு வழங்கியிருக்கிறது எனலாம்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *