அப்துல்கலாமின் வழி, அசோகரின் செயல் – களமிறங்கிய சௌந்தரராஜா!

சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தின் மூலமாக அறிமுகமானார். தங்க ரதம், ஒரு கனவு போல, கள்ளன், சிலுக்குவார்பட்டி சிங்கம், திருட்டுப்பயலே 2, என சௌந்தரராஜாவின் திரைப்பயணம் வளர்ந்துகொண்டிருக்கிறது.

ஆகஸ்டு 11. சௌந்தரராஜாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், சௌந்தரராஜா.
தன் சொந்த செலவில், முறையாக பெரிய குழிகள் தோண்டி, அடிப்படை உரமிட்டு, ஆடு, மாடுகள் கடிக்காமல் இருக்க, ரூபாய் 1200க்கு மேல் விலையுள்ள ஆளுயர பாதுகாப்பு கூண்டுகள் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஏற்பாடு செய்து, அவற்றை முறையாக வளர்க்க உறுதி, மற்றும் ஏற்பாடும் செய்திருக்கிறார் சௌந்தரராஜா. ஏன் எனில் பெயருக்கு மரக்கன்று நட்ட நிகழ்வாக அது இருக்கக்கூடாது என்று சௌந்தரராஜா விரும்பியதே காரணம்.

இதுபற்றி சௌந்தரராஜா கூறுகையில்,

இந்த பிறந்தநாளில் என் பலவருடக்கனவு நிறைவேறியது. சின்ன வயசுல பள்ளிக்கூடத்துல மாமன்னன் அசோகன் மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார்னு பாடம் படிச்சிருப்போம். அதுக்கு அப்புறம் நம்ம, ஒவ்வொருத்தரும் தனி மனிதனாக எவ்வளவு மரங்களை நட்டோம், எவ்வளவு குளங்களை வெட்ட காரணமாக இருந்தோம்னு கேட்டா, அது பெரிய கேள்விக்குறி தான். என் வாழ்நாளில் நிறைய மரங்களை நடணும்னு பெரிய கனவு எனக்கு. நடுறது மட்டுமில்லை. அதை முறையா பராமரிச்சு வளர்க்கணும். என் வாழ்நாளில் 10 இலட்சம் மரங்கள் நடணும்கிறது என் கனவு. அது நிறைவேற நான் மட்டும் போதாதுன்னு நெனைச்சேன். அதனால், அப்துல்கலாம் அய்யா வழியில் மாணவர்களோட பேச முடிவெடுத்தேன். இப்போ என்னோட இந்த பிறந்தநாளில் 120 மாணவர்களுடன் 25 மரக்கன்றுகள் நட்டதை என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வா நினைக்கிறேன். அந்த மாணவர்கள் படிக்கிற பள்ளியிலேயே அந்த மரங்களை நட்டது இன்னும் மகிழ்ச்சியான விசயம். மாணவ, மாணவிகளிடம் பேசிய போது, இந்த மரக்கன்றுகளை 25 மரக்கன்றுகளாக பார்க்காமல் 25 குழந்தைகளாக நேசித்து வளர்க்கவேண்டும். வளர்ப்பீர்களா என்று கேட்டேன்.. மிகவும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கோரஸாக வளர்ப்போம் என்றார்கள்.

இந்த நிகழ்வில் எனக்கு உற்றதுணையாக இருந்த தலைமையாசிரியர் குணசேகரன் சார், மற்ற ஆசிரியர்கள், ஆசிரியைகள் முல்லைவனம், அகந்த், சானா, பாடலாசிரியர் முருகன் மந்திரம், நண்பர் அசோக், உள்ளிட்ட அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.

இன்னும் சில வருடங்களில் மரங்கள் வளர்ந்து அப்போது படிக்கிற மாணவர்களுக்கு நிழல் தரும். அந்த சந்தோஷத்தை இப்போதே உமையாள்பரணச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் எனக்குத் தந்து உறுதி அளித்தார்கள். இதைப்போலவே மாணவர்களோடும் மக்களோடும் தொடர்ந்து பேசி நிறைய மரங்கள் வளர்க்கச்செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து செய்வேன்.

அதோடு மாணவர்களிடம் பேசிய சௌந்தரராஜா, தேர்தலில், சாதி, மத அடிப்படையிலோ, பணம் வாங்கிக்கொண்டோ ஓட்டு போடக்கூடாது என்று உங்கள் அப்பா, அம்மாவிடம், சகோதர, சகோதரிகளிடம் உறுதியாக சொல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆள் உயரத்திற்கு வளர்ந்த பூவரசு, புங்கம், நாவல், ஐந்து இதழ் பாலை, வேம்பு ஆகிய வகையில் 25 மரக்கன்றுகள், இயற்கை அடி உரம் இடப்பட்டு நடப்பட்டது நட்ட நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் சௌந்தரராஜா உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Soundararaja Speaking about Tree Planting: https://youtu.be/L4SdoG7zvYE