சென்னையில் நடிகை அதீதி மேனன் துவக்கிவைத்த இந்திய சுற்றுலா பொருட்காட்சி 2017!

சென்னையில் 43 – வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2017 தொடங்கியது!

சென்னையில் அதீதி மேனன் துவக்கிவைத்த அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் கடந்த 42 வருடங்களாக சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சென்னை தீவுத்திடலில் நடத்தக்க வருகிறது. இந்த வருட 43வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தினாலும், வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்களினாலும் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த வருட பொருட்காட்சி FUN WORLD & RESORTS INDIA PVT. LTD என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இப்பொருட்காட்சியில் அசையும் விலங்குகளின் பிரம்மாண்டமான கண்காட்சி முதன்முறையாக சென்னையில் இடம் பெற்றுள்ளது.

இதனை கடந்த மாதம் வெளிவந்த பட்டதாரி படத்தின் கதாநாயகி அதீதி மேனன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இவர் ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவாகும் ‘சந்தன தேவன்’ படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.நிகழ்ச்சியில் புழல், திருட்டு விசிடி படங்களின் நாயகன் மனோவும் பங்கேற்றார்.

மேலும் பலவிதமான இராட்டினங்கள், 3D Show கண்ணாடி மாளிகை, மோட்டு பட்லு, 3D செல்பி, பேய் வீடுகள், மீன் கண்காட்சி மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், பாப் கார்ன், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து வகையான உணவு பொருட்களும் பொருட்காட்சியில் கிடைக்க பெறுகின்றன. மேலும் பலவிதமான கைத்தறி கைவினை பொருட்கள், பிளாஸ்டிக் சாமான்கள், ரெடிமேட் ஆடைகள், காஸ்மெட்டிக் மற்றும் பேன்சி வகைகள் மிக குறைந்த விலையில் இங்கே கிடைக்கிறது. வழக்கம் போல் மத்திய மாநில அரசுத்துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்து பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்குகின்றன.

பொருட்காட்சியில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.25/- ம் சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு ரூபாய் 15/- ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் , ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பொருட்காட்சிக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக பொருட்காட்சியின் முன் மாநகர பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப்பொருட்காட்சி 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.