நடிகை மீனாவின் வீட்டை வாங்கவில்லை – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சூரி


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. விஜய், அஜீத், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர் நடித்த புரோட்டா காமெடி இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சூரி சினிமாவில் நடிப்பதுடன் ஓட்டல் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகை மீனாவின் வீடு விலைக்கு வந்ததாகவும் அதை ரூ.6.5 கோடி கொடுத்து சூரி வாங்கி விட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை சூரி மறுத்துள்ளார்.

மீனா வீட்டை வாங்கியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான். சென்னையில் சமீபத்தில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.