கலைஞர் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர் “கண்ணம்மா”!

வேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்கும் ‘கண்ணம்மா’ மெகா தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 2 முதல் (2.11.2015) இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.

கண்ணம்மா பிரபல தொழிலதிபர் சங்கர நாராயணனின் மகள்; தன்னிடம் வேலை பார்த்த ஸ்ரீனிவாஸ், கம்பெனியில் மோசடி செய்ததற்காக வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ், சங்கர நாராயணனைப் பழி வாங்குவதற்காக, அவரது மகள் கண்ணம்மாவை நம்ப வைத்து காதலிக்கிறான்; குடும்ப எதிர்ப்பையும் மீறி ஸ்ரீனிவாஸைத் திருமணம் செய்த கண்ணம்மா கணவனே உலகம் என்று வாழ்கிறாள்; நான்கு குழந்தைகள் பிறந்தபின், தனது பழிவாங்கும் படலத்தின் அடுத்த கட்டமாக, கண்ணம்மாவையும் குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு தலைமறைவாகிறான் ஸ்ரீனிவாஸ்! அதிர்ச்சியடைந்த கண்ணம்மா வாழ வழியின்றி போராடுகிறாள்! வறுமையை எதிர்த்து வாழ்க்கையில் வென்றாளா? அல்லது வாழ வழியின்றி பெற்றோரிடம் சரணடைந்தாளா? என்று இன்றைய குடும்ப கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது கண்ணம்மா மெகா தொடரின் கதைக்கரு.

இத்தொடரில் சோனியா, பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ஐசக், ராஜசேகர், சுமங்கலி, அழகு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் – என்.கிருஷ்ணசாமி
மூலக்கதை, இயக்கம் – வேதபுரி மோகன்
என்.எஸ்.பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, மரிய மனோகர் இசையமைக்கிறார். சாலமங்கலம் சேகர்ராம் எக்ஸுக்யூட்டிவ் மேனேஜராகப் பணியாற்றுகிறார். வேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்கிறார்.இத்தொடரின் டைட்டில் பாடலைப் பிரபல சினிமா பாடகர் வேல்முருகன் பாடுகிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ‘கண்ணம்மா’ மெகா தொடர் நவம்பர் 2ந் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *