குடும்பத்தோடு எல்லாரும் பார்க்கும்படி படம் எடுக்க முடியாது: மிஷ்கின் பேச்சு!

போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் ‘தற்காப்பு’. இப்படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடிகர் கார்த்தி பாடல்களை வெளியிட ஜெயம்ரவி பெற்றுக்கொண்டார். ட்ரெய்லரை இயக்குநர் மிஷ்கின் வெளியிட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் மிஷ்கின் பேசும்போது, “இந்தப்படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். யுஏ மற்றும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரிய அடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம். கெட்ட வார்த்தைகள், வன்முறை இருந்தால் அதற்கு ஏ சான்றிதழ் என்று சொல்லிவிடுகிறார்கள். கெட்ட வார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடா செல்லமே -ன்னா திட்ட முடியும்?

நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன். ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்தரம் தேவை. படத் தணிக்கையின்போது சில வார்த்தை களை நீக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை.

சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக்கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.

சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்கமுடியாது என்கிறார்கள். என் படத்துக்குக் குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்துவிட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்துதான் படங்கள் வந்துள்ளன. ஆனால் மனிதர்களைவிட பேய்கள் நல்லவை. பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல். பிசாசைப் பார்த்தால் பயப்படவேண்டாம், என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்துவிட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் இயக்குநர் பாலாவிடம் திட்டுதான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும்போதும் எண்ணியதுபோல செய்யமுடியவில்லை. சுதந்திரம் இல்லாவிட்டால் அது என்ன கலை?

நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்த இடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் போய்விடுகிறது. ஒரு விஷயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவண செய்யவேண்டும்.

நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பெண்கள், குழந்தைகள் தயவுசெய்து வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத் துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை” என்று பேசினார். இந்த இயக்குநர் ரவி சிறந்த உழைப்பாளி. வாழ்த்துகள் ”என்றார் இயக்குநர் மிஷ்கின்.