“விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்” – நடிகர் கமல்ஹாசன்


“இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியன்2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஏற்கெனவே இயக்குநர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் கமலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது நீண்ட நேரம் கமல்ஹாசனை காக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் உயிரிழந்த 3 சகோதரர்களுக்கு நான் செய்யும் கடமையாக இதனை பார்க்கிறேன் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு, ஆஜரான கமல்ஹாசன் தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வரும் நிலையில் விபத்து நடந்தது எப்படி என கமல்ஹாசனை நடித்துக் காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *