மும்மொழியில் சாஹூ – பாகுபலி நாயகன் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்!

பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு அதிரடி திரைப்படம் சாஹூ.

இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர். ஆம், ஹசீனா பார்க்கர் படநாயகியே சாஹூவில் பிரபாசுடன் திரையைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார்.

ஆஷிக்-2 படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் SS ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்புகளான பாகுபலி திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத, நிறைவான இடத்தைப் பிடித்த பிரபாஸின் காதல் நாயகியாக இதில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான வம்சி மற்றும் பிரமோத், இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அவர்கள், “ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு எனவும், அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி” எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கூறுகையில், “இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம் என்பதால் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது என்றும், பரபரப்பான-விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காது” என்றனர்.

சாஹூ குடும்பத்தில் ஸ்ரத்தா கபூரை பரவசத்துடன் வரவேற்கும் தயாரிப்பாளர்கள், பிரபாஸ்-ஸ்ரத்தா ஜோடி வெள்ளித்திரையில் ஏற்படுத்தவிருக்கும் சுவராஸ்யத்தை வெகுவாக எதிர்நோக்கி காத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

பாகுபலி – 2 வெளியீட்டுடன் இரசிகர்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸர், வெகுவான வரவேற்பைப் பெற்றதுடன், ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் கிளப்பி இருக்கறது.

திரைபடத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க, அமிதாப் பட்டாச்சார்யா பாடல்கள் எழுத, சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கிறார்.
சுஜீத் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிறது.

இத்திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *