எனது சுறுசுறுப்புக்கு காரணம் … சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது.

தெலுங்கில் தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்தது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது …

‘‘தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான இந்த விழா இங்கு விமரிசையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.

அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.

இந்த விழாவுக்கு வந்து இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எனது முதல் படம் வெளியானபோது பிறந்துகூட இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்போது இருந்து தொடர்ந்து நடித்து வருகிறேன். 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.

தமிழ்நாட்டில் ரசிகர்கள் என்மீது எந்த அளவுக்கு அன்பு காட்டுகிறார்களோ, அதே அளவுக்கு தெலுங்கு ரசிகர்களும் அன்பு காட்டுவதை எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தெலுங்கு மக்கள் சினிமா பிரியர்கள். என்னை ஆதரிக்கிறீர்கள்.

தமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.

படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அது தர்பார் படத்தில் நடந்து விட்டது. 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி உள்ளது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

சூப்பர்ஸ்டாரின் இந்த சுவாரஸ்யமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *