சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் – ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்!


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

‘7-ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம், 2 ரூபாய் டாக்டர் ஹரிஹரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணி ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க மோதிரம்-காப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.
செல்வா எனும் மாணவனுக்கு பள்ளி கல்விக்கான உதவித்தொகையும், ஸ்வேதா என்ற மாணவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவச பட்டப்படிப்புக்கான ஆணையும், பிரதீப் எனும் பட்டதாரிக்கு அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு கிறிஸ்தவ ஜோடிக்கு நிச்சயதார்த்தம், இந்து ஜோடிக்கு திருமணம் மற்றும் இன்னொரு தம்பதியினருக்கு 60-ம் கல்யாண நிகழ்வும் நடத்தப்பட்டன. அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் 70 கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து 200 பெண்களுக்கு 3 சக்கர தள்ளுவண்டி, சேலை, இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு காலை-மதிய உணவும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *