7 – விமர்சனம்


போலீஸ் அதிகாரி ரகுமானிடம் தனது காதல் கணவர் ஹவீஷை காணவில்லை என புகார் அளிக்கிறார் நந்திதா ஸ்வேதா. அவர் சொன்ன அதேபோல இன்னொரு பெண்ணின் கதையை சொல்லி இன்னொரு பெண்ணும் தனது கணவர் ஹவீஷை காணவில்லை என புகார் கொடுத்திருப்பதாக கூறி நந்திதாவை அதிர வைக்கிறார் ரகுமான். இந்த நிலையில் ஐதராபாத்தில் ஒரு பெண் தனது கணவர் ஹவீஷ் என்றும் அவரை காணவில்லை என்றும் புகார் கொடுத்தது தெரிய வருகிறது.

இதனால் முதலில் மிஸ்ஸிங் என இருந்த வழக்கு தற்போது சீட்டிங் வழக்காக மாறுகிறது. சதீஷ் குறித்து தகவல் சொல்ல வந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதனால் ஹவீஷ் மீதான சந்தேகம் வாழுகிறது. ஒருவழியாக அவரை பிடித்து ஜெயிலில் அடைத்து விசாரிக்கும் நேரத்தில் தனக்கு இந்த மூன்று பேருமே யார் என தெரியாது என புதிய குண்டை போடுகிறார் ஹவீஷ்.

இந்தநிலையில் நான்காவதாக ஒரு பெண் வந்து ஹவீஷ் தான் என் கணவர் என இன்னொரு குண்டுக்கு திரி கொளுத்த படம் வேகம் எடுக்கிறது. ஆனால் போலீசிடம் இருந்து தப்பி இந்த வழக்கில் மர்மத்தை ஆராய முற்படும்போது அதன் பின்னால் கிராமத்து ஜமீன்தார் பெண்ணான ரெஜினா இருப்பது தெரியவருகிறது.

ஏற்கனவே ரேஜினாவுகும் ஹவீஷுக்கும் கூட் சம்பந்தம் இருப்பது தெரியவருகிறது. அப்படி என்ன இருவருக்குமான சம்பந்தம்.. ஏன் ஹவீஷுக்கு சிக்கல்களை உருவாக்கினார்கள் இந்த நான்கு பெண்களும் எதற்காக ஹவீஷை தனது கணவர் என கூறினார்கள் என்பது இடைவேளைக்கு பின்பு வரும் திருப்புமுனை காட்சிகள் மூலம் ஆங்காங்கே தெரியவர, இறுதியில் இந்த மர்மத்திற்கான சூத்திரதாரி யார் என்கிற உண்மையும் விளங்குகிறது.

ஒரு கதாநாயகன் அவரை மையப்படுத்தி சுழலும் 6 பெண்கள் என்கிற அடிப்படையில் படத்திற்கு 7 எனும் டைட்டில் வைத்துள்ளார்கள். பார்ப்பதற்கு விஜய் ஆண்டனியின் சித்தப்பா பையன் போல இருக்கிறார் நாயகன் ஹவீஷ். கதாநாயகிகளில் ரெஜினா மற்றும் நந்திதா தவிர மற்ற அனைவரும் நமக்கு தெரியாத புதுமுகங்கள்தான். ரெஜினாவுக்கு இதுவரை நடித்திராத மிக மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரம்.. அவரும் ரசித்து செய்திருக்கிறார். நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்.

ஹவீஷ்-நந்திதா காதல் எபிசோடு சுவாரஸ்யம் கூட்டுகிறது மற்ற நாயகிகளில் அனிஷா அம்புரோஸ் பார்ப்பதற்கு களையாக இருப்பதுடன் கவனத்தையும் ஈர்க்கிறார். கிளைமாக்ஸில் வரும் பாட்டி அவதாரம் நம்பும்படியாக இல்லை என்றாலும் மிரட்டல் ரகம்.. கதைக்கு அவர்தான் ஆதாரம் என்பதையும் மறுக்க முடியாது.

இவர்களைத் தாண்டி படத்தில் இன்னொரு கதாநாயகன் என்பது போல ஆரம்பத்தில் பில்டப் செய்யப்படும் ரகுமான், போகப்போக ஒரு டம்மி கதாபாத்திரம் போல ஆக்கப்பட்டதில் நமக்கு ஏமாற்றமே. படத்தின் இயக்குனர் நிசார் ஷபி ஆரம்பத்தில் ஏதோ ஒரு காதல் கதை போல ஆரம்பிப்பது போல சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் போகப்போக அதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் கதையாக மாற்றியதால் ரசிகர்களின் அர்ச்சனையில் இருந்து தப்பித்து சபாஷ் பெறுகிறார்.

ஒரு வித்தியாசமான கோணத்தில் கதையை உருவாக்கியவர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரசியமான திரில்லர் படமாக இது மாறி இருக்கும்.. என்றாலும் காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் சில மர்மங்களுடன் படத்தை நகர்த்துவதில் இயக்குனர் நிசார் ஷபி வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஜாலியான ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தாராளமாக இந்தப்படத்திற்கு டிக்கெட் புக் பண்ணலாம்..