96 – விமர்சனம்


பள்ளிப்பருவத்தை கடந்துவந்த அனைவருக்குமே தங்களது இளமைக்காலத்தை திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு அழகிய காதல் கதை தான் இந்த ‘96’.

விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் பத்தாவது வரை ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. இருவருக்குள்ளும் அந்த வயதுக்கே உரிய காதல் எட்டிப்பார்க்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தும் காலம் கனிவதற்குள் விஜய்சேதுபதி படிப்பிற்காக சென்னைக்கு இடம் மாறுகிறார். காலங்கள் உருண்டோட 22 வருடங்கள் கழிந்த நிலையில் அந்நாளைய பள்ளி நண்பர்கள் மீண்டும் ஒன்றுகூடும் நிகழ்வு உருவாகிறது.

அங்கே மீண்டும் சந்திக்கிறார்கள் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும். அவர்களுக்குள் இருக்கும் காதல் அப்படியே இன்னும் இருக்கிறதா..? அதை இப்போதாவது அவர்களால் வெளிப்படுத்த முடிந்ததா..? இல்லை காலம் அவர்களிடம் மாற்றத்தை கொண்டுவந்து விட்டதா என அழகான ஒரு பயணத்தின் ஊடாக விடை சொல்கிறது மீதிக்கதை..

லைப்டைம் கேரக்டர்கள் என சொல்வார்களே அதுதான் இந்தப்படத்தில் விஜய்சேதுபதிக்கும் த்ரிஷாவுக்கும் வாய்த்திருகிறது. கிடைத்த வாய்ப்பை இருவருமே தவறவிடவில்லை. விஜய்சேதுபதி, த்ரிஷா இருவருமே இதில் புதிதாக தெரிகிறார்கள். அதிலும் த்ரிஷாவும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும் ரொம்பவே புதுசு.

காதலை மனதிற்குள்ளேயே தேக்கி வைத்திருந்த காதலர்கள் இருபது வருடங்களுக்கு பிறகான சந்திப்பிற்குப்பின் தங்கள் உணர்வுகளை எப்படியெல்லாம் வெளிபடுத்துவார்கள் என இதுவரை னாம் பார்த்துவந்த படங்களில் இருந்தும் காட்சிகளில் இருந்தும் இந்தப்படம் முற்றிலும் மாறாக இருக்கிறது. அதற்கு காரணம் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் தான்..

இவர்களின் இளமைக்கால கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் ஆதித்யாவும் கௌரியும் மிக பொருத்தமான தேர்வு.. பாந்தமான நடிப்பு. சொல்லப்போனால் அவர்கள் தங்களுக்குள் அரும்பிய அந்த வயதிற்கான காதல் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியதால்தான், இன்றைய நிகழ்கால காதலர்களை நம்மால் ரசிக்க முடிகிறது. நம்மில் அவர்களை பொருத்திப்பார்த்துக்கொள்ள முடிகிறது.

அருமையான காதல் கதைக்கு இசையால் தனி வடிவம் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. அதேசமயம் கதை நடக்கும் காலகட்டத்தினாலோ என்னவோ இளையராஜாவின் தாக்கத்தை படம் முழுதும் உணர முடிகிறது. இந்த காதலை நாம் அனுபவித்து உணர்வதற்கு சண்முக சுந்தரம்-மகேந்திரனின் ஒளிப்பதிவும் பெரும் துணையாக நிற்கிறது.

இன்றைய தேதியில் ‘அழகி’ பாணியில் தொண்ணூறுகளின் காதல் பற்றி சொன்னால் எடுபடுமா என்பது சிரமம் தான்.. ஆனால் அதை சொல்லவேண்டிய வகையில் சொன்னால் அது காவியமாக மாறும் என்பதை தனது அழகான திரைக்கதை மூலமாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

படம் முடிந்து வெளியே வரும்போது முன்னாள் காதலியை சந்திக்கும் ஆர்வத்தில் ஒரு சந்திப்புக்கு நமது மனது தயாராகி விடுகிறது என்பதுதான் இந்தப்படத்தின் வெற்றி.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *