அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – விமர்சனம்


பெற்றோர் கண் முன்னால் அமர்ந்து படிக்கும் பையனுக்கும், நண்பர்களுடன் குரூப் ஸ்டடி பண்ணும் பையனுக்கும் வித்தியாசம் உண்டு தானே..? விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அடங்கி ஒடுங்கி நடித்த சிம்புவுக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற அவுத்துவிட்ட காளையுடன் இணைந்த சிம்புவுக்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது இந்தப்படத்தில்..

மதுரை மைக்கேல் சிம்பு வயசுக்காலத்தில் ஸ்ரேயாவை லவ் பண்ணுகிறார்… பின் அவர் ஜெயிலுக்குப்போக, ஸ்ரேயா வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்கிறார்.. அடுத்து வயதான சிம்பு ஒண்டிக்கட்டையாக இருக்கும்போது அவர் வாழ்க்கையில் தமன்னா என்ட்ரி கொடுக்கிறார்.. அவர்மீதும் சிம்பு லவ்வாக, தமன்னாவோ வேறு ஒரு பையனை கைகாட்டுகிறார்..

இனிமே தான் என் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் என சவால் விடுகிறார் சிம்பு.. மற்றவை இரண்டாம் பாகத்தில் தொடருமாம்..

இந்தப்படத்தின் கதை இதுவாக இருக்கலாம் என நாங்கள் குத்துமதிப்பாக கணித்ததை இங்கே சொல்லியிருக்கிறோம்.. இன்னும் சிலரிடம் கேட்டால் அவர்கள் வேறு மாதிரி சொல்லக்கூடும்.. சிம்பு தன் மனதில் தோன்றிய ஆசையை எல்லாம் ஆதிக் ரவிச்சந்திரன் மூலமாக முழுப்படத்திலும் காட்சிகளாக மாற்றியிருக்கிறார். படம் முழுதும் சிம்பு மற்றும் டி.ஆரின் கதையையும் அலம்பல்களையும் கேட்டே ஆகவேண்டி இருக்கிறது என்பது, அதுவும் அவர் வாயாலேயே கேட்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை..

அஸ்வின் தாத்தா கேரக்டரில் சிம்புவுக்கு நரைச்ச முடியும் நரைச்ச மீசையும் வைத்தால் அவர் வயசான ஆளா..? திருமணமாகாத வயதான ஆண்களை தூக்கிப்பிடிக்கும் அளவுக்கு சிம்புவுக்கு வயசாகிவிட்டதா..? இல்லை பொண்ணுதான் கிடைக்க மாட்டேன் என்கிறதா.. அவருக்கே வெளிச்சம்.. இப்படி படம் முழுதும் படுத்தி எடுக்கிறார்..

துபாயில் ஓப்பனிங்கில் சிம்புவுக்கு கொடுக்கும் பில்டப்புக்கும் அவர் மதுரை ஜெயிலில் இருந்து தப்பிக்க கொடுத்த பில்டப்புக்கும் என்னய்யா சம்பந்தம்..? அதிலும் கார் சக்கரங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி அட்டாக் பண்ணுவது எல்லாம் செம காமெடி..

ஒய்.ஜிமகேந்திரனுக்கு சுவிட்ச் போர்டை பார்த்தல் கை நமநம என்கிறதாம்.. உடனே அதை தொட்டு ஷாக் வாங்க, சிம்பு அவர் வாயுடன் வாய் வைத்து அவருக்கு உயிர் கொடுக்கிறாராம்.. அதை சாக்காக வைத்து ஸ்ரேயாவை காதலிக்க சொல்கிறாராம். இதை ஒரு காமெடி என நினைத்துக்கொண்டு இந்த கண்றாவி நான்கைந்து முறை வேறு இடம்பெறுகிறது.

ஸ்ரேயாவுக்கு குளோசப் இல்லை.. ஆனால் ஒய்..ஜி.மகேந்திரனுக்கும் மொட்ட ராஜேந்திரனுக்கும் குளோசப்.. ரொம்ப முக்கியம் பாருங்க.. ‘பாகுபலி’யில் கிடைத்த கௌரவத்தை இதில் ‘பலி’ கொடுத்திருக்கிறார் தமன்னா. கஸ்தூரிக்கு மேக்கப்பும் ஒரு காஸ்ட்யூம் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.. ப்ப்ப்பப்பா.. சரியான கஸ்தூரன் தான்…

சிம்பு ஒரு ஆள் போதாது என்று இன்னொரு பக்கம் கோவை சரளா வேறு படுத்தி எடுக்கிறார்.. படத்தின் ஒரே ஒரு ஆறுதல் என்றால் அது மொட்ட ராஜேந்திரன் தான்…

சிம்பு அவ்வப்போது கொடுத்த கால்ஷீட்டை வைத்து, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் எடுத்தவரை காட்சிகளை கோர்த்து, அதை முதல் பாகம் என்கிற லேபிளை ஒட்டி வெளியிட்டு இருக்கிறார்கள்.

மொத்தப்படத்தையும் பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும்போது ஒன்றே ஒன்று மட்டும் தெரிகிறது.. படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும் வச்சு செய்திருக்கிறார்கள்.. இந்த அடியில் இருந்து அவர் எழ நீண்ட நாட்கள் ஆகும்..