அண்ணாதுரை – விமர்சனம்


விஜய் ஆண்டனி மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தான் அண்ணாதுரை.. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் ஆண்டனி இதில் என்ன வித்தியாசம் காட்டியுள்ளார்..?

இரட்டையர்களாக பிறந்தவர்கள் தான் அண்ணாதுரையும் தம்பிதுரையும்.. காதலி தனது கண்முன்னே விபத்தில் சிக்கி மரணம் அடைந்துவிட, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் நிரந்தர குடிகாரனாகி விடுகிறார் அண்ணாதுரை. ஒரு பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக இருந்து வருகிறார் தம்பிதுரை. தம்பிதுரையை விரும்புகிறார் டயானா சாம்பிகா. அதையடுத்து தம்பிதுரைக்கும் டயானாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

குடிகாரன் என்றாலும் நல்லவர் என்பதால், உள்ளூரில் பியூட்டி பார்லர் நடத்தும் ஜூவல் மேரி அண்ணாதுரையை விரும்புகிறார். அவருடன் வாழ்க்கைய துவக்கலாம் என்கிற எண்ணம் ஏற்பட்ட நிலையில் அண்ணாதுரை மீது ஒரு கொலைப்பழி விழுந்து ஜெயிலுக்கு போகிறார். ஏழு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு அண்ணாதுரை ஊருக்கு வரும்போது அப்பா நடத்திவந்த துணிக்கடையை உள்ளூர் ரவுடிகள் அபகரித்து விடுகிறார்கள்.

அதோடு தம்பிதுரை ஒரு பெரிய ரவுடியாக உருவெடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் அண்ணாதுரை. அமைதியான தம்பிதுரை எப்படி ரவுடியானார்..? அப்பாவை ஏமாற்றியவர்களை அண்ணாதுரை என்ன செய்தார் என்கிற கேள்விகளுக்கு விடைதருகிறது மீதிப்படம்.

விஜய் ஆண்டனியை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து சென்டிமென்ட் கலந்த ஒரு ஆக்சன் படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜி.சீனிவாசன். ஆனால் அதற்கேற்ற வகையில் வலுவான திரைகதை அமைப்பதில் அவர் கோட்டைவிட்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். படத்தின் முதல் பாதி காதல், அம்மா, தம்பி சென்டிமென்ட் என்று கொஞ்சம் மெதுவாகவே பயணிக்கிறது. ஆனால் அண்ணாதுரை ஜெயிலில் இருந்து திரும்பி வந்ததும் கதை சூடு பிடிக்கிறது. அதை தொடர்ந்து ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகள் தான் இதிலும் வரிசை கட்டுகின்றன.

தனக்கு எந்த அளவுக்கு நடிப்பு வரும் என்பதை விஜய் ஆண்டனி பலமுறை ஓப்பனாக கூறிவிட்டாலும் கூட, இதில் அண்ணாதுரை, தம்பிதுரை என இரண்டு கேரக்டருக்கும் நன்றாகவே வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஆனாலும் இப்படியே சொல்லிக்கொண்டு இராமல் தன்னை அடுத்தகட்டத்திற்கு அவர் நகர்த்திச்செல்ல வேண்டும்.

தம்பிதுரையை காதலிக்கும் கேரக்டரில் நடித்துள்ள டயானா சாம்பிகா நடிப்பில் புதுமுகம் மாதிரி தெரியவில்லை. துறுதுறுவென்று வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மஹிமா, ஜூவல் மேரி என இன்னும் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் டயானா தான் நம்மை அதிகம் கவர்கிறார். மற்ற இருவரும் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

டயானாவின் தந்தையாக வரும் செந்தில்குமார் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காளிவெங்கட்டிற்கு கதையில் திருப்பம் ஏற்படுத்தும் குணச்சித்திர வேடம்.. வழக்கமாக கெட்ட போலீஸாக வரும் சேரன்ராஜ், இதில் முழுப்படத்திலும் லோக்கல் ரவுடியாக சிறப்பாக நடித்துள்ளார். எம்.எல்.ஏவாக வரும் ராதாரவிக்கு இதில் வேலை குறைவே.. இன்னொரு வில்லனாக பழைய ரஜினி பட அடியாள் வில்லன் உதய் ராஜ்குமார் கவனம் ஈர்க்கிறார்.

விஜய் ஆண்டனியின் இசை, எடிட்டிங், தில் ராஜூவின் ஒளிப்பதிவு போன்ற டெக்னிகல் அம்சங்கள் படத்திற்கு ஓரளவு விறுவிறுப்பை கொடுத்திருக்கின்றன. அதேசமயம் ஆமை வேகத்தில் நகரும் முதல் பாதி, கமர்சியல் அம்சங்களே இல்லாத திரைக்கதை படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விடுகிறது.

அந்தவகையில் வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடித்துவரும் விஜய் ஆண்டனி இந்தமுறை கதை தேர்வில் கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அதனால் விஜய் ஆண்டனியின் படங்களுக்கென்றே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்து வைத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த அண்ணாதுரை கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்திருக்கிறார்.