அருவி – விமர்சனம்


ஒரு அழகான சிறிய குடும்பத்தில் பிறந்து, மிகவும் செல்லமாக வளர்ந்தவள் அருவி (அதிதி பாலன்). தன்னுடைய இளம் பருவத்தில் சிலரால் பலாத்காரத்திற்கு ஆளாகி, உடலால் கெட்டவள் என தன்னுடைய குடும்பத்தாலேயேநிராகரிக்கப்படுகிறாள். எந்தவித தவறுமே செய்யாத அவள் எவ்வாறு இந்த சமுகத்தின் குரோதமான பார்வையால் வஞ்சிக்கப்படுகிறாள் என்பதே இந்த அருவியின் ஒருவரிக்கதை.

மிகப்பெரிய இயக்குனர், மிகப்பெரிய ரசிகர் பலம் கொண்ட நடிகர், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என பல விளம்பரங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படங்களின் வெற்றிகூட இன்று குதிரைகொம்பாக உள்ளநிலையில் அறிமுக இயக்குனர், நடிகர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் என ஒரு குழுவே ஒரே திரைப்படத்தில் அறிமுகமாக களமிறங்கினால் எப்படி இருக்கும்?

பெண்ணை மையப்படுத்திய திரைக்கதை என்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல, ஆனால் சமகால அரசியலையும், வணிக சந்தையையும், மனித உணர்வுகளின் பற்றாக்குறையையும் ஒரே திரைப்படத்தில் பெண்ணை மையப்படுத்தி அமைக்கபட்டுள்ளதால் அப்படங்களில் இருந்து அருவி வேறுபடுகின்றது.

“காதலை எப்படி வார்த்தையால் எக்ஸ்ப்ளெயின் பண்ணமுடியும்” என்ற மென்மையான வசனத்தை முதல்பாதியில் பேசும் அருவி தான் சமூகம் சார்ந்த தீவிரமான வசனத்தையும் பேசுகின்றார். வசனம், உடல்மொழி, பார்வை என அனைத்திலும் ஒரு தேர்ந்த அறிமுக நடிகையாக கவனத்தினை ஈர்கின்றார் அதிதி பாலன்.

அதிதிபாலனின் நடிப்பு உச்சம் என்றால், படத்தில் நடித்த அருவியின் அப்பா, அடைக்கலம் கொடுக்கும் திருநங்கை அஞ்சலி வரதன், ரியாலிட்டி ஷோ இயக்குனர் கவிதா பாரதி, அதை நடத்தும் லட்சுமி கோபால்சாமி, என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதேனும் ஒரு விதத்தில் நம் மனதில் ஆழமாக பதிகின்றனர்

அறிமுக ஒளிப்பதிவாளர் ஷெல்லி காட்லிஸ்ட்டின் ஒளிப்பதிவு திரை அனுபவம் என்பதை கடந்து அருவியின் வாழ்கையில் நாமும் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தினை கொடுக்கின்றது. தவிர, படத்தொகுப்பு, கலை இயக்கம், ஒலியமைப்பு என எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்து அமைந்துள்ளது.

பாடல்கள் இருந்தாலும் முதல் பாதியை சோர்வே இல்லாமல் நகர்த்தி செல்கின்றது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கதைப் பயணிப்பதால் பின்னணி இசையின் பங்கு முக்கியமானதகிறது.. அதனை அறிமுக இசையமைப்பாளர்களான பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் திறம்பட கையாண்டுள்ளனர்.

இப்படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். காலம் கடந்து நிற்கும் விதமாக எந்த சமரசமும் செய்யாமல் இந்த ‘அருவி’யை உருவாக்கி இருக்கிறார். புதுமுகங்கள் நடித்ததாலோ என்னவோ இப்படம் வெளிப்படுத்தும் உணர்வினை அப்படியே நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிகின்றது.

சின்ன பட்ஜெட் படங்கள் ஓடமாட்டேன் என்கிறது என யாராவது இனி சொன்னால் ‘அருவி’ படத்தை காட்டி குமட்டில் குத்துங்கள்.. நல்ல படங்களை ரசிகர்கள் ஆராதிப்பார்கள் என்பதற்கு இந்த அருவி தான் லேட்டஸ்ட் சாட்சி.