‘அய்யனார் வீதி’ – விமர்சனம்

கே.பாக்யராஜ், பொன்வண்ணன் யுவன், சாராஷெட்டி, சிஞ்சு மோகன், சிங்கம்புலி, செந்தில்வேல், மீரா கிருஷ்ணன், முத்துக்காளை நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு–சக்திவேல், இசை– யுகே.முரளி, இயக்கம் -ஜிப்ஸி என்.ராஜ்குமார். தயாரிப்பு ஸ்ரீசாய் சண்முகம் பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜயசங்கர்.

தலைமுறைகளின் பகை பற்றிய கதை. அந்த ஊரில் மரியாதையும் கௌரவமும் உள்ள குடும்பம் ஜமீன் அய்யனார் குடும்பம். ஒருகாலத்தில் அய்யனார் அப்பாவின் உறவினரான மச்சானே அந்த ஊரில் சாராயம் காய்ச்ச, அதைக் குடித்து அந்தக் கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அய்யனார் அப்பாவான பெரிய ஜமீன் இதைக் கேள்விப்பட்டதும் அவனைத் தண்டிக்கச் சொல்கிறார். ஊர்மக்கள் அடித்தே கொன்று விடுகிறார்கள். இதனால் குடும்பப் பகை வருகிறது .சாராயம் காய்ச்சிய குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைக்கிறார்கள்.

அடுத்த தலைமுறையிலும் இது பகையாகத் தொடர்கிறது.அய்யனாருக்கு போன தலைமுறை பகையான மாடசாமியின் வாரிசு பாண்டியன் துணைக்குத் தன் தம்பி மருதுவை வைத்துக் கொண்டு அவ்வூரில் சாராயம் காய்ச்சிக் குடிக்க வைத்து அய்யனாரையும் மக்களையும் பழிவாங்கத் துடிக்கிறான்.அது மட்டுமலல அய்யனார் மகள் துர்காவை களங்கப் படுத்த திட்டமிடுகிறார்கள். .விளைவு ? கோவில் நகையைத் திருடி அய்யனார் மீது பழிபோடுகிறார்கள். ஊர்த்திருவிழாவின் போது அய்யனார் கோவில் மணியைத் திருடி கலகமூட்டுகிறார்கள்.

போலீசைக் கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அய்யனார் வீதியில் எந்த அநியாயமும் தவறுகளும் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் அய்யனாருக்கு எதிராக அனைத்து அக்கிரமங்களும் தலைவிரித்தாட வைத்த பாண்டியன், மருது கோஷ்டிக்கு முடிவு என்ன ஆகிறது.? அய்யனார் என்ன செய்கிறார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

படம் கிராமமும் கிராமம் சார்ந்த பகுதிகளில் படமாகியுள்ளது. நகரநெருக்கம் வாகனங்கள், கட்டடங்கள் என்று நகர கலாச்சாரத்தையே பார்த்துப் போரடித்த ரசிகர்களுக்கு இப்படம் கிராமத்துக்கு அழைத்துச் சென்ற உணர்வைத் தருகிறது படமே அய்யனார் சித்த பிரமை போல் மௌனமாக இருக்கிறாரே அவருக்கு என்ன ஆகிவிட்டது என்கிற ப்ளாஷ்பேக்கில் தொடங்குகிறது. நடந்த முன் கதை விரிகிறது. அது மட்டுமல்ல படத்தில் வேறு சிறுசிறு ப்ளாஷ் பேக்குகளும் உள்ளன.

அய்யனாராகப் பொன்வண்ணன் நடித்து இருக்கிறார். தோற்றத்தில் பொருத்தம். மரியாதையான மிடுக்கில் செயல்பாடுகளில் அதிகம் பேசாமலேயே கவர்கிறார், சுப்ரமணிய சாஸ்திரியாக வரும் பாக்யராஜ் தனக்கே உரித்தான் பாணியில் வருகிறார். சின்னச்சின்ன முடிச்சு போட்டும் அவிழ்க்கிறார். படத்தின் முடிவு அவர் தலையில். அய்யனாராக வேடமிட்டு அவர் செய்யும் கொலை அட.. எனத் திடுக்கிட வைக்கிறது.

படத்தில் கிளைக்கதைகள் சில உள்ளன அதில் ஒன்றுதான் யுவன்– சாராஷெட்டி கல்லூரிக் காதல் .வாழ்க்கையில் முன்னேற லட்சியம் வேண்டும் என்று கூறி, காதலிக்கும் முன் ஏதாவது சாதித்து விட்டு வா என்கிறார் சாரா. இளம் சாதனையாளர் விருது இருவருமே பெறுகின்றனர் பின்னே ஏன் காதலன் யுவனை நிராகரிக்கிறார் என்று புரியவில்லை.

துர்காவாக வரும் சிஞ்சு மோகன் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார் குணச் சித்திரமாகப் பளிச்சிட்டுள்ளார். தயாரிப்பாளர் செந்தில்வேல் மருது என்கிற வில்லனாக வருகிறார். துடிப்பான நடிப்பில் வெறுப்பேற்றி வசவுகள் வழியாகவே பாராட்டு பெறுகிறார்.

பாக்யராஜை இன்னமும் புத்திசாலித் தனமான காட்சிகளில் பயன் படுத்தியிருக்கலாம். சிலகாட்சிகள் பழைய படத்து உணர்வைத் தருகின்றன

சிங்கம்புலியின் காமெடி பெரிதாக எடுபடவில்லை. யூகே முரளியின் இசையில் பாடல்களில் திறமை. காட்டியுள்ளார். ‘வராரு ஐயன் வராரு ‘கோயில்களில் இனி தூள்கிளப்பும். ‘பொண்ணுங்களை பொறுத்தவரை’ கானாபாணி கலக்கல். ‘கண்ணுச் சாராயம் முன்னாலே’ குத்துப்பாட்டு .’அன்பு கொண்ட ஐயன் முகம்’ இனிமை ரகம் .கிராமத்து இயல்பை அழகை யதார்த்தமாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சக்திவேல் .பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார் ..

ஆங்காங்கே பிரியும் இளைக்கதைகளைஇயக்குநர் தவிர்த்தால் ‘அய்யனார் வீதி’ தேரோட்டம் ஒரே நேர்க் கோட்டில் சென்றிருக்கும்.