பாகுபலி -2 ; விமர்சனம்


இந்த இரண்டாம் பாகத்தில் அமரேந்திர பாகுபலி மன்னனாக முடிசூட்டுவதற்கு முன் திக்விஜயம் செய்ய கட்டப்பாவுடன் நாட்டைவிட்டு சாதாரண மனிதனாக கிளம்புகிறான்.. வழியில் உள்ள ஒரு ஒரு சிறிய நாட்டின் இளவரசி தேவசேனாவை சந்திக்கிறான்.. காதல் கொள்கிறான். அவளது நாட்டுக்கு வரும் ஆபத்திலிருந்து அவளை காப்பாற்றி அவள் மனதிலும் இடம்பிடிக்கிறான்.

ஆனால் அவன் தேவசேனாவை விரும்பும் விபரத்தை அறிந்துகொண்ட பல்லாள தேவன், தனது தாய் ராஜாமாதா சிவகாமி மூலமாக குறுக்கு வழியில் அவளை மணம் முடிக்க நினைக்கிறான். இதுகுறித்து சிவகாமி பெண் கேட்டு உத்தரவு ஓலை அனுப்ப, அதை உதாசீனப்படுத்துகிறாள் தேவசேனா. கோபம் கொண்ட சிவகாமி, பாகுபலியிடம் அவை கைது செய்து அழைத்துவர உத்தரவிடுகிறாள்.

அதன்படியே தேவசேனாவை தனது நாட்டுக்கு அழைத்து வரும் பாகுபலி, அவளை மணம் முடிக்க சிவகாமியிடம் சம்மதம் கோருகிறான்.. ஆனால் பாகுபலியின் செயலால் காயம்பட்ட சிவகாமி, மன்னனாக தனது மகனுக்கு முடிசூட்டி, பாகுபலியை சேனாதிபதி ஆக்குகிறாள்.. தொடர்ந்து வரும் நாட்களில் பாகுபலியும் நிறைமாத கர்ப்பிணி தேவசேனாவும் பல்லாள தேவனின் சூழ்ச்சிக்கு ஆளாகி அரண்மனையை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்..? மகேந்திர பாகுபலி தனது பெரியப்பன் பல்லாள தேவனின் பகை முடித்து மகிழ்மதி அரசின் அரியணையை கைப்பற்றினானா என்கிற இரண்டு கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக ‘பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை கட்டமைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

முதல் பாகத்தின் மூலம் ஒரு அற்புதமான அனுபவத்தை உணர்ந்த நம்மை எந்தவித உறுத்தலும் இல்லாமல் இரண்டாவது பாகத்துடன் ஐக்கியமாக வைத்து விடுகிறது விஜயேந்திர பிரசாத்தின் கதை சொல்லும் விதமும் ராஜமௌலி அதை படமாக்கியுள்ள நேர்த்தியும்..

முதல் பாகத்திற்கு சற்றும் குறையாத உழைப்பை தந்துள்ளார் பாகுபலியாக நடித்துள்ள பிரபாஸ்.. இயக்குனர் மட்டுமல்ல, நம்மாலும் பாகுபலி கதாபாத்திரத்தில் பிரபாசை தவிர வெறும் யாரையும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் மனம் முழுக்க நிறைந்துவிடுகிறார் பிரபாஸ்.

முதல் பாகத்தில் தமனாவுக்கு காட்சிகளை விட்டுகொடுத்த தேவசேனா அனுஷ்கா, இந்த இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க விஸ்வரூபம் காட்டியுள்ளார். சண்டைக்காட்சி ஆகட்டும், ராஜமாத சிவகாமியையே எதிர்த்து பேசும் தைரியமாகட்டும் எங்கும் குறைவைக்கவில்லை அனுஷ்கா..

படத்தின் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லும் விதமாக படம் முழுக்க எங்கும் எதிலும் வியாபித்து இருக்கிறார் சத்யராஜ். கட்டப்பா கேரக்டருக்கு உயிரோட்டம் தரும் விதமான அவரது நடிப்பு, நிச்சயம் அவருக்கு தேசிய விருது உட்பட பல விருதுகளை இழுத்துவரும். ராஜமாதா சிவகாமியாக வரும் ரம்யா கிருஷ்ணன் இந்த இரண்டாம் பாகத்தில் எடுக்கும் ஒரு சில முடிவுகளால் அவரது கதாபாத்திரத்தின் மீதான மரியாதை குறைகிறதே தவிர அவரது நடிப்பில் எந்த குறையும் தெரியவில்லை.

வாழ்க்கை முழுதும் குரூரத்தையே இதயமாக கொண்ட ஒருவனின் வாழ்க்கையை படம் முழுவதும் வாழ்ந்து முடித்திருக்கிறார் பல்லாள தேவனான ராணா டகுபதி. முதல் பாகத்தில் இடம்பெறாத இன்னும் சில துணை கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பால் படத்தை இன்னும் மெருகேற்றி இருக்கின்றனர்.

படத்தை ரசித்து பார்க்க வைத்ததில் இசையமைப்பாளர் கீரவாணி, ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் மொத்த உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. போர்க்கள காட்சிகள் முதல் பாகத்தைப்போல இதிலும் உக்கிரமாகவே உருவாக்கப்பட்டுள்ளன.. வசனங்களில் கத்தியின் கூர்மை.. இந்த இரண்டாம் பாகத்தில் பிரபாஸ்-ராணா-ரம்யா கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்றைய தமிழக அரசியல் களத்துடன் ஒத்துப்போவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

வழக்கமாக முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தில் முக்கால்வாசி உணர்வை இரண்டாம் பாகம் ஏற்படுத்தினாலே அதுவே பெரிய விஷயம். ஆனால் இந்தப்படம் முதல் பாகத்தை மிஞ்சும் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது என படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் பேசிக்கொண்டே வருவதை கேட்கும்போது….

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்திய சினிமாவை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் தூக்கிப்பிடித்திருக்கிறார் என நெஞ்சை நிமிர்த்தி சொல்ல தோன்றுகிறது..