பக்ரீத் ; விமர்சனம்


மிகுந்த கஷ்ட ஜீவனத்துக்கு இடையே விவசாயம் செய்து வருபவர் விக்ராந்த். அவருக்கு தெரிந்த ஒருவரிடம் பக்ரீத் பண்டிகைக்காக வந்து சேர்ந்த ஒட்டகத்தின் குட்டி ஒன்று, விக்ராந்த் வசம் வந்து சேர்கிறது.. அதையும் ஆடு மாடுகளை போல நேசித்து வளர்க்கிறார் விக்ராந்த். ஒருகட்டத்தில் இந்த சூழல் ஒட்டகத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் அதன் உடல்நிலை சுகவீனம் அடைகிறது. அதைப் பரிசோதித்த மருத்துவர் ஒட்டகத்திற்கான சூழல் நிலவும் அதன் சொந்த பிரதேசத்திலேயே அது வளர்வதுதான் நல்லது என்கிறார்.

இதைத்தொடர்ந்து அந்த ஒட்டகத்தை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று விட முடிவு செய்து அதற்கான பயணத்தை மேற்கொள்கிறார் விக்ராந்த். அந்த பயணத்தில் அவர் மேற்கொள்ளும் சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏமாற்றங்களும் திருப்பங்களும் தான் மீதிக்கதை அந்த ஒட்டகத்தை நினைத்தபடி அவரால் ராஜஸ்தானில் கொண்டு போய் சேர்க்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்கிற மையக்கருவை வைத்துக் கொண்டு இந்த பக்ரீத் படத்தை உணர்வுகளால் தோரணமாக கட்டி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீஷ் சுப்பு.

பாண்டியநாடு படத்திற்கு பிறகு விக்ராந்துக்கு மீண்டும் சொல்லிக் கொள்ளும்படியான ஒரு அருமையான படம் என்று இதை சொல்லலாம். உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். ஒட்டகத்துக்கும் அவருக்குமான பாசப்பிணைப்பு நம்மை நெகிழவைக்கிறது. ஒட்டகத்தை அதனிடத்தில் சேர்ப்பதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் நம்மை சற்றே பதைபதைக்க வைத்தது உண்மை. விக்ராந்த்தை தேடி இனி நல்ல கதாபாத்திரங்கள் வரும் என்பது நிச்சயம்.

விக்ராந்தின் மனைவியாக வசுந்தரா இனிய கிராமத்து மனைவியின் பிரதிபலிப்பை அச்சு அசலாக கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்கள் குறிப்பாக லாரி டிரைவர் மற்றும் கிளீனர் அந்த வெட்னரி டாக்டர் என அனைவருமே எதார்த்த மனிதர்களாகவே நம்முன் நடமாடுவதால் படத்துடன் இயல்பாகவே ஒன்றி ரசிக்க முடிகிறது.

குறிப்பாக ஒட்டகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளுக்கு குதூகலமாக இருப்பதுடன் நிச்சயம் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். விலங்குகளும் நம்மைப் போன்றவர்களே.. அவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும்.. அவற்றை அதனதன் சூழலில் வசிக்க விட வேண்டும் என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்த்தால் சிறந்த அனுபவம் கிட்டும் என்பதில் ஐயமில்லை

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *