டியர் காம்ரேட் – விமர்சனம்


தூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா எந்நேரமும் மாணவர் தலைவனாக அடிதடி ரகளைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது பக்கத்து வீட்டுக்கு தனது அக்கா திருமணத்திற்காக சென்னையில் இருந்து வருகிறார் ராஷ்மிகா திருமணம் முடிந்து கிளம்புவதற்குள் அவருடன் நட்பாக பழகி ஒருகட்டத்தில் தனது காதலை தெரிவிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் பதிலேதும் சொல்லாமல் ராதிகா சென்றாலும் பின்னர் அவரைத் தேடிச் செல்லும் விஜய் தேவரகொண்டாவிடம் தான் காதல் வயப்பட்டதை தெரிவிக்கிறார் ராஷ்மிகா.

ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் தேவரகொண்டா இன்னும் பழைய அடிதடி நபராகவே இருப்பதை கண்கூடாக பார்க்கும் ராஷ்மிகா அவரை கண்டிக்கிறார்.. ஆனால் அந்த நேரத்தில் ராதிகாவையே உதறித் தள்ளுகிறார் விஜய்.. இதனால் காதலில் விரிசல் விழுந்து விஜய்யுடன் பேசுவதை சுத்தமாகவே நிறுத்திவிடுகிறார் ராஷ்மிகா.

இதனால் பித்துப்பிடித்தவர் போல மாறும் விஜய் தேவரகொண்டா மனமாற்றத்திற்காக பைக்கை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் தேசாந்திரம் கிளம்பி விடுகிறார்… சில வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்க்கையில் ஓரளவுக்கு பக்குவமடைந்து சென்னைக்கு வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிகிறது.

அதிர்ச்சி அடையும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை குணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் அவருக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்பதையும் ராஷ்மிகா தனது லட்சியமான கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி நிற்பது ஏன் என்பதையும் ஆராய்கிறார்.. ராஷ்மிகாவை குணப்படுத்தினாரா..? காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் தந்தாரா என்பது மீதிக்கதை..

முன்னணி நாயகனாக வளரக்கூடிய ஒவ்வொரு ஹீரோவுக்கும் இதுபோன்ற ஒரு துடிப்பான வேகமான ரொமான்ஸ் மற்றும் சமூக அக்கறை கொண்ட இளைஞன் கதாபாத்திரம் நிச்சயமாக வந்து சேரும்.. இப்போது விஜய் தேவரகொண்டாவின் முறை.. ராஷ்மிகாவுடன் காதலில் விழுவதும் காதலை விட நண்பர்களுக்காக அடிதடியில் இறங்குவதையே பெரிதாக நினைப்பதும் என ஒரு விடலைப் பையன் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன் கண்முன் நிறுத்துகிறார் விஜய் தேவரகொண்டா. இடைவேளைக்கு பிறகு அப்படியே டோட்டலாக மாறும் விஜய் தேவரகொண்டா மீண்டும் ராஷ்மிகாவுக்காக அதே பழைய நிலைக்கு, அதேசமயம் பக்குவப்பட்ட நபராக மாறுவது என தனது கதாபாத்திரத்தை புதுப்புது பரிமாணங்களில் காட்டியுள்ளார்.. ஒரு மாஸ் ஹீரோவாக இந்தப் படம் விஜய் தேவரகொண்டாவை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

ராஷ்மிகா பார்க்க அழகாக இருக்கிறார்.. சிரிக்கும்போது அழகாக இருக்கிறார்.. அதேசமயம் முழு படத்திலும் தனது நடிப்பால் தான் மிகச் சிறந்த நடிகை என்பதையும் நிரூபிக்கிறார்.

இந்த படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குவது விஜய் தேவரகொண்டவை, ராஷ்மிகாவை சுற்றியுள்ள நபர்கள்தான்.. தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அழகுற செய்திருக்கிறார்கள்.. குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் தேர்வு கமிட்டியில் அதிகாரியாக வரும் நபர்..

நான்கு மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய பொறுப்பு என்றாலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் சரி அதை அழகாக சமாளித்திருக்கிறார்.. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் பணி ரொம்பவே பவர்புல்லானது.. தூத்துக்குடி சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும் சென்னை காட்சிகளாகட்டும் அல்லது வட இந்தியாவில் பயணிக்கும் காட்சிகளாகட்டும் பிரமிக்க வைக்கிறார் தனது ஒளிப்பதிவால்.

ஸ்டூடண்ட்ஸ் அடிதடி, ரவுடித்தனமான இளைஞனை ஹீரோயின் காதலிப்பது என ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் அதில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்திருப்பதுதான் ஸ்பெஷல். தவிர இடைவேளைக்கு பிறகு காதலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் வாரியம், அதற்குள் நடக்கும் செலேக்சன் மோசடி என சமூக விஷயத்திலும் கதையை திருப்பியதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் கம்மா. நிச்சயம் இளைஞர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.