தேவ் ; விமர்சனம்


நண்பர்கள் விக்னேஷ் அமிர்தா இவர்கள் மட்டுமே உலகம் என இருக்கும் கார்த்தி, ஒரு சாகசப்பிரியர்.. வசதியான வீட்டுப் பிள்ளையான இவர் மனம்போன போக்கில் தான் சுற்றுவதுடன் தன்னையும் தேவையில்லாமல் அழைத்துக்கொண்டு சுற்றுவதை தடுப்பதற்காக அவரை காதல் கல்யாணம் என்கிற வலையில் சிக்கவைக்க திட்டமிடுகிறார் நண்பர் விக்னேஷ். பேஸ்புக் மூலமாக எதேச்சையாக தட்டுப்படும் ரகுல் பிரீத் சிங் போட்டோவை காட்டி இவரை நீ காதலி என தூண்டிவிடுகிறார்.

கார்த்தியும் ரகுலின் பால் ஈர்க்கப்பட்டு அவர் மேல் காதலாகிறார் பின்னர்தான் தெரியவருகிறது ரகுல் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் காதலை வெறுப்பவர் என்றும்.. அப்படிப்பட்டவரையே கொஞ்சம் கொஞ்சமாக தனது சாகசத்தால் காதலில் விழ வைக்கிறார் கார்த்தி. ரகுலும் தனது மொத்த சுபாவத்தையும் மாற்றி முழுக்க முழுக்க காதலுக்கு மாறும்போது, கார்த்தி இன்னொரு புதிய தளத்தில் நுழைகிறார்.

இந்த இடத்தில் இருவரது ஈகோவும் முட்டிக்கொள்ள அது இவர்களது காதலில் விரிசல் விழவைக்கும் அளவிற்கு செல்கிறது. காதலின் பிரிவை தாங்க முடியாமல் கார்த்தி ஒரு அதிர்ச்சியான காரியத்தை மேற்கொள்கிறார் அது அவரது காதலை அவருக்கு மீட்டுத் தந்தது இல்லையா என்பது கிளைமாக்ஸ்

விறைப்பும் முறைப்புமாக திமிரும் தெனாவட்டுமாக இதுவரை நாம் பார்த்து வந்த கார்த்தி இந்த படத்தில் லவ்வர் பாயாக புதிய முகமாக காட்சி அளிக்கிறார். காதலில் விழுவதும் காதலையும் ஒரு சாகசமாக் சாதிக்க துடிப்பதும் காதலின் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிப்பதும் என நடிப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார் கார்த்தி.

ஏற்கனவே கணவன் மனைவியாக நாம் பார்த்துவிட்ட கார்த்திக்-ரகுல் ப்ரீத் சிங் ஜோடி இதில் ஹைடெக் காதலர்களாக காட்சியளிப்பதும் புதுசு தான் அதை உணர்ந்து ரகுல் பிரீத் சிங் தனது நடிப்பில் காட்சிக்கு காட்சி சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் ராகுலின் தொழிலதிபர் கதாபாத்திரத்தின் கெத்து தான் காதல் உணர்வுகளுக்கு அவ்வப்போது தடை போடுகிறது..

ஜாடிக்கேத்த மூடியாக கார்த்தியின் நண்பர்களாக ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் அம்ருதா கூட்டணி கச்சிதம் தான். ஆனால். ஒரு முழு நீள படத்தை தனது காமெடியால் தாங்கி சுமக்கும் சக்தி நிச்சயமாக விக்னேஷுக்கு இல்லை என்பது மட்டும் தெரிகிறது. சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகும் மாறி இருக்கிறது..

காதலர்களின் பாசமான பெற்றோர்களாக ரம்யா கிருஷ்ணனும் பிரகாஷ்ராஜும் தங்களது வழக்கமான கர்ஜனைகளை குறைத்துக்கொண்டு பக்குவமான பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் சம்பந்தமே இல்லாமல் என்ட்ரி கொடுத்தாலும் ஒரே காட்சியில் நடித்துள்ள நிக்கி கல்ராணியும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனங்கே, ஒரு நூறு முறை பாடல்கள் உருக வைக்கின்றன. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடியாதவர்கள் ஏக்கத்தையும் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணம் செய்ய முடியாதவர்களின் தாகத்தையும் ஒரு சேர தீர்த்து வைத்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.

ஏழை காதலோ, நடுத்தரவர்க்கத்து காதலோ அல்லது பணக்கார காதலும் எதுவானாலும் அதில் பரஸ்பர நம்பிக்கை தான் முக்கியம் என்பதை மையக்கருத்தாக படம் முழுவதும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர். ஆனால்.. சமீபகாலமாக வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் கார்த்திக்கு இந்த படம் ஒரு சறுக்கல் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தான் சொல்லவந்த கதையை பலவிதமான குழப்பங்களுடன் மோசமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஜத் ரவிசங்கர்.

ஒன்று இதை சாகச படமாக எடுத்து இருக்க வேண்டும் அல்லது காதல் படமாக எடுத்திருக்க வேண்டும்.. இரண்டையும் கலந்து ஏதோ செய்யப் போய் ஏதோ ஆன கதையாக மாறிவிட்டது. இனி காதல் கதை என யாராவது வந்தால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்கிவிடுங்கள் கார்த்தி.. அதுதான் உங்கள் கேரியருக்கு நல்லது