தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்


படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் உனது தந்தை இறக்கும் சூழல் ஏற்பட்டதாக ஹரிஷ் கல்யாணிடம் அவரது தாத்தா கூறுகிறார். இதைக் கேட்கும் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு ஜாதகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் வளர்ந்த பிறகு திருமணத்திற்கு பெண் தேடுகின்றனர். அப்போது அவர்களது ஆஸ்தான ஜோதிடர் வேற்று மொழி பேசும் கன்னி ராசி பெண் தான் ஹரிஷ் கல்யாணுக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறுகிறார். ஆகையால் கன்னி ராசி உள்ள பெண்ணாக தேடுகின்றனர். ஆனால் வரன் அமையவில்லை.

இந்நிலையில் ஹரிஷ் கல்யானின் முன்னாள் காதலி ரெபா மோனிகா ஜானுக்கு திருமணம் நடைபெறுகிறது. அத்திருமணத்திற்கு வரும்படி ஹரிஷ் கல்யாணை அழைக்கிறார் முன்னாள் காதலி.

திருமணத்திற்கு செல்லும் ஹரிஷ் கல்யாண் அங்கு நாயகி டிகங்கனாவை பார்த்து காதல் கொள்கிறார். நாயகியும் காதலிக்க இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் டிகங்கனாவின் ராசியைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார். ஆனால் நாயகி டிகங்கனாவோ முற்போக்கு சிந்தனை உள்ளவர். ஆகையால் ராசி, ஜோதிடம் இவற்றில் எல்லாம் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இருவேறு கொள்கைகளுடன் இருக்கும் நாயகனும் நாயகியும் ஜோடி சேர்ந்தர்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஹரிஷ் கல்யாண் பிளே பாயாக படம் முழுவதும் இளமை ததும்பும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார்.

இருக்கும் நாயகி டிகங்கனா அழகு பதுமையாக இருக்கிறார், காதல், கவர்ச்சி ஆட்டம் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியான ரெபா இயக்குநர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

யோகிபாபு அவ்வப்போது வந்து கதையை மட்டும் சொல்லி செல்கிறார். நகைச்சுவை காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

பிரியாணி மீது காதல் கொண்டவராக முனீஸ்காந்த் ரசிகர்களைக் கவர்கிறார். ஜோதிடராக வரும் பாண்டியராஜன், மயில்சாமி ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் சஞ்சய் பாரதி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் இளமை துள்ளளோடு இருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

மொத்தத்தில் காதல் கலாட்டாவாக வந்துள்ளது இந்த ‘தனுசு ராசி நேயர்களே’